Last Updated : 27 Jul, 2024 05:37 AM

3  

Published : 27 Jul 2024 05:37 AM
Last Updated : 27 Jul 2024 05:37 AM

மொழிகளை வளர்க்க பிரதமர் மோடியின் புதிய முயற்சி: தமிழ்க் கல்விக்கு புதிய சேனல் ‘யாழ் டிவி’

புதுடெல்லி: மத்திய கல்வித்துறை சார்பில் பிஎம் ஈ-வித்யா திட்டத்தின் கீழ் ஸ்வயம் பிரபா எனும் பெயரில் பள்ளி மாணவர்களுக்கான தொலைக்காட்சி சேனல்கள் செயல்பாட்டில் உள்ளன. இவை, மாணவர்கள் தங்கள் வீட்டில் இருந்தவாறு கல்வி கற்பதற்காக கடந்த 2017, ஜுலை 7-ல் தொடங்கப்பட்டன.

கரோனா பரவல் காலத்தில் இவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. டிடிஎச் சேனல்களான இவை குஜராத்தின் காந்தி நகரிலுள்ள பிஐஎஸ்ஏஜி நிறுவனம் சார்பில் செயற்கைக்கோள் மூலம் ஒளிபரப்பப்படுகின்றன. இதற்கான பாடத்திட்ட வீடியோ பதிவுகளை என்பிடிஇஎல், ஐஐடி.க்கள், யூஜிசி, சிஇசி, இக்னோ, என்சிஇஆர்டி, என்ஐஓஎஸ் ஆகிய மத்திய அரசின் நிறுவனங்கள் அளிக்கின்றன.

இந்தவகையில், இந்தப் பட்டியலில் முதலாவதாக தமிழுக்காக ‘யாழ் டிவி’ எனும் பெயரில் புதிய டிடிஎச் சேனல் தொடங்கப்பட உள்ளது. இதனை வரும் திங்கள்கிழமை பிரதமர் மோடி டெல்லியில் தொடங்கி வைக்கிறார்.

இந்த சேனலுக்கான நிகழ்ச்சியை தயாரிக்கும் பொறுப்பு மத்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்திடம் (சிஐஇடி) அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான பாடங்களை சென்னையிலுள்ள மத்தியசெம்மொழி தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் (சிஐசிடி), டெல்லியிலுள்ள என்சிஇஆர்டி ஆகியவை தயாரிக்கத் தொடங்கியுள்ளன.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் மத்திய கல்விஅமைச்சக வட்டாரம் கூறும்போது, ‘‘யாழ் சேனலில் தமிழ் மொழி,கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்டவை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பாடங்களாக ஒளிபரப்பாக உள்ளன. அனைத்து வகுப்பு மாணவர்களுக்கான இந்த சேனலைபொதுமக்களும் பார்க்கலாம். தமிழ் அறியாதவர்கள் தமிழைகற்றுக்கொள்வதுடன் அதன் பெருமைகளை அறிந்துகொள்வார்கள். இந்த சேனல் மூலம் குறிப்பாக வடமாநில மக்கள் தமிழை முழுமையாக அறிந்து கொள்ளலாம். தமிழை தொடர்ந்து 8-வது அட்டவணையின் பிற மொழிகள் மற்றும்அதில் இடம்பெறாத மொழிகளுக்கும் படிப்படியாக புதிய சேனல்களை எங்கள் துறை தொடங்க உள்ளது" என்று தெரிவித்தனர்.

தினமும் 4 மணி நேரத்துக்கான தமிழ்ப் பாடங்கள் இந்த யாழ் சேனலில் ஒளிபரப்பாக உள்ளன. பிறகு இதே பாடங்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் மறுஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் புதிய பாடங்கள் மட்டுமின்றி மறு ஒளிபரப்பும் தொடரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x