Published : 26 Jul 2024 06:05 PM
Last Updated : 26 Jul 2024 06:05 PM
புதுடெல்லி: இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு குறைந்த விலையிலும், எளிதில் சிகிச்சைகள் கிடைக்கும் வகையிலான அனைத்து முயற்சிகளை அரசு எடுத்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.
மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) கேள்வி நேரத்தின்போது துணைக் கேள்விகளுக்கு பதில் அளித்த சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா, "நோயாளிகளுக்கு குறைந்த விலையிலும், எளிதில் சிகிச்சைகள் கிடைக்கும் வகையிலான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நாட்டில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை 2.5 சதவீதம் அதிகரித்து வருகிறது.
ஆண்களில் வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோயாளிகள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் 15.5 லட்சத்துக்கும் அதிகமான புதிய புற்றுநோயாளிகள் பதிவாகின்றனர். புற்றுநோய்க்கு பயன்படுத்தும் 131 மருந்துகளின் பட்டியல் உள்ளன. அவை அனைத்தும் அட்டவணை 1-ல் உள்ளன. அவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அவற்றுக்கான விலைகள் அரசாங்கத்தால் தீர்மானிக்கப்படுகின்றன. அவை அனைத்தும் பரவலாக பயன்படுத்தப்படும் மருந்துகள். இந்த விலைக் கட்டுப்பாட்டால், நோயாளிகள் மொத்தமாக ரூ.294 கோடி வரை மிச்சப்படுத்தியுள்ளனர்.
இவை தவிர, 28 சேர்மானங்கள் உள்ளன. அவை இந்தப் பட்டியலில் இல்லை. ஆனாலும் தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் மற்றும் அரசு அவற்றின் விலைகளைக் கட்டுப்படுத்தியுள்ளன. புற்றுநோய்க்கான மருந்து குறைவான விலையில் கிடைப்பதற்கு நாங்கள் முயற்சி எடுத்து வருகிறோம்” என்று அவர் தெரிவித்தார்.
சுகாதார உள்கட்டமைப்பு குறித்த மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த ஜெ.பி.நட்டா, "இந்த விவகாரம் குறித்து அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள் அதிக அளவில் இருக்கும் வகையில் மருத்துவக் கல்லூரிகள் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. மருத்துவப் படிப்பில் அளவிலும் தரத்திலும் ஒரு சமநிலை இருக்க வேண்டும். நாங்கள் எங்களால் முடிந்த அளவு வேகமாக செயல்படுகிறோம். அதேநேரத்தில் மருத்துவர்களின் மருத்துவத் தரத்தில் சமரசம் செய்ய நாங்கள் தயாராக இல்லை" என்று தெரிவித்தார்.
மேலும், அவையில் அவர் கூறுகையில், "கடந்த 2014-ம் ஆண்டு 387 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை தற்போது 731 ஆக உயர்ந்துள்ளது. இதே காலக்கட்டத்தில் 51,348 ஆக இருந்த மருத்துவ படிப்புக்கான (எம்பிபிஎஸ்) இடங்கள் 1,12,112 (1.12 லட்சம்) உயர்ந்துள்ளது. மருத்துவ மாணவர்களுக்கான முதுகலை படிப்புக்கான இடங்களின் எண்ணிக்கை 2014-ல் 31,185 ஆக இருந்தது. தற்போது அவை 72,627 ஆக உயர்ந்துள்ளன" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT