Published : 26 Jul 2024 01:08 PM
Last Updated : 26 Jul 2024 01:08 PM

அசாமின் அஹோம் வம்சத்தின் ‘மொய்தாம்கள்’ உலக பாரம்பரிய சின்னமாக அறிவிப்பு

புதுடெல்லி: அசாம் மாநிலத்தின் அஹோம் வம்சத்தின் மொய்தாம்களை (புதைமேடுகள்) இந்தியாவின் 43-வது உலக பாராம்பரிய சின்னமாக யுனஸ்கோ அறிவித்துள்ளது. புதுடெல்லியில் வெள்ளிக்கிழமை நடந்த 46-வது உலக பாரம்பரிய குழு கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியானது. இந்த மொய்தாம்கள் இந்தியாவின் பிரமிடுகள் என்று அழைக்கப்படுவதும் உண்டு.

2023-24- ஆம் ஆண்டுகான யுனஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலுக்கு இந்தியாவின் சார்பில் மொய்தாம்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. இந்த அறிவிப்பின் மூலம், கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஐக்கிய நாடுகள் சபை நிறுவனத்தின் அங்கீகாரத்தை பெறும் வடகிழக்கு இந்தியாவின் முதல் கலாச்சாரச் சின்னம் இதுவாகும்.

மொய்தாம்கள் என்பது அசாமின் அஹோம் வம்சத்தின் மன்னர்கள், மகாராணிகள், பிரபுக்களின் அடக்கம் செய்யப்பட்ட இடமாகும். ‘மொய்தாம்’என்ற வார்த்தை தாய் வார்த்தைகளான பிராங்-மை-தாம் அல்லது மை-தாம் என்பதில் இருந்து வந்தது. இதற்கு ‘அடக்கம்’ அல்லது ‘ஆவி’ என்பது பொருள்.

மொய்தாம்களில் இருப்பது என்ன?: அசாமில் உள்ள ஒவ்வொரு மொய்தாம்களும் மூன்று பகுதிகளை உள்ளடக்கியது. அவை, 1. உடல் வைக்கப்பட்டிருக்கும் பெட்டகம் அல்லது அறை, 2. அறையை உள்ளடக்கிய அரைகோள மண்மேடு. 3.வருடாந்திர வழிபாட்டுக்காக மேலே ஒரு செங்கல் அமைப்பு (சாவ் சாலி) மற்றும் எண்கோண வடிவத்துடன் கூடிய எல்லைச் சுவர்.

இறந்தவர்களின் அந்தஸ்து மற்றும் வளங்களைப் பொறுத்து அவர்களைப் புதைக்கும் இடமானது சிறு மேடுகள் முதல் சிறிய குன்றுகளாக இருக்கின்றன. இவை முதலில் பெட்டகங்கள் மரத்தூண்கள் மற்றும் விட்டங்களால் உருவாக்கப்பட்டன. பின்னர், ருத்ர சிங்கா மன்னரால் அவை (CE 1696-1714) கல் மற்றும் செங்கல்களால் அமைக்கப்பட்டன.

மொய்தாம்களின் பெட்டகத்தில், இறந்தவர்களுடன் அவர்களின் ஆடைகள், ஆபாரணங்கள், ஆயுதங்களுடன் புதைக்கப்பட்டனர். இறந்தவர்கள் பயன்படுத்திய விலையுயர்ந்த பொருள்களுடன் அவர்களின் உதவியாளர்களும் உயிருடனோ இறந்த நிலையிலோ உடன் புதைக்கப்பட்டனர். ருத்ர சிங்கா மன்னர் ஆட்சி காலத்தில் மனிதர்களை உயிருடன் புதைக்கும் வழக்கம் நிறுத்தப்பட்டது.

மொய்தாம் கலாச்சாரத்தின் முதலும் முடிவும்: அசாமை ஆண்ட முதல் அஹோம் மன்னன், சாவு-லுங்க் சிவு-கா-பாவுடன் இந்த மொய்தாம் புதைமேடு பாரம்பரியம் தொடங்கியது. அவர், தை -அஹோம் முறைப்படி சாரெய்டியோவில் புதைக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து அஹோம் வம்சத்தின் இந்த வழக்கத்தினைத் தொடர்ந்தனர். அவர்களின் 600 ஆண்டு கால ஆட்சியில் சாரெய்டியோ ஒரு புனித தளமாக மாறியது. காலப்போக்கில் இந்து மதத்தின் தாக்கத்தால், அஹோம்கள் இறந்தவர்களின் உடல்களை எரிக்கத் தொடங்கினர். என்றாலும் மொய்தாம் அடக்க முறை இன்றும் சில மதகுருமார் குழுக்கள் மற்றும் சாயோ -தாங் க்ளான்களால் (அரசனின் மெய்காப்பாளர்கள்) பின்பற்றப்படுகிறது.

அசாம் முதல்வர் மகிழ்ச்சி: இந்த அறிவிப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, இந்த அறிவிப்புக்காக பிரதமர் மோடி, யுனேஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களின் குழு உறுப்பினர்கள் மற்றும் அசாம் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அசாமின் தை - அகோமின் சமூகத்தின் ஆழமான மத நம்பிக்கை, வளமான நாகரீக பாரம்பரியம் மற்றும் கட்டிடக்கலை வலிமையை சரெய்டியோவில் உள்ள மொய்தாம்கள் உள்ளடக்கி உள்ளன.

பாரத மண்ணில் இருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பதைத் தாண்டி மேலும் இரண்டு காரணங்களுக்காக இந்த அறிவிப்பு சிறப்பு வாய்ந்தது. முதல் முறையாக வடகிழக்கு இந்தியாவின் சின்னம் ஒன்று யுனஸ்கோவின் கலாச்சார வகையின் கீழ் பட்டியலிடப்படுகிறது. இரண்டாவது, காசிரங்கா மற்றும் மானாஸ் தேசிய பூங்காகளுக்கு பின்னர் இது அசாமின் 3வது உலக பாரம்பரிய சின்னமாகும். அசாமிற்கு வந்து அதன் அழகை அனைவரும் அனுபவிக்குமாறு உங்களை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x