Published : 26 Jul 2024 11:34 AM
Last Updated : 26 Jul 2024 11:34 AM
டிராஸ்: “கடந்த கால தவறுகளில் இருந்து பாகிஸ்தான் இன்னும் பாடம் கற்கவில்லை. தீயநோக்கத்துடன் இந்தியாவை அணுகினால், இந்திய ராணுவ வீரர்கள் தங்களின் முழு பலத்துடன் தீவிரவாதத்தை நசுக்குவார்கள். எதிரிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.” என்று கார்கில் போர் வெற்றியின் 25-வது நினைவு தினத்தில் பிரதமர் மோடி பேசினார்.
கார்கில் போர் வெற்றியின் 25-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் அப்போரில் இன்னுயிர் நீத்த ராணுவத்தினருக்கு பிரதமர் மோடி வீரவணக்கம் செலுத்தினார். ஜம்மு காஷ்மீரின் கார்கில் மாவட்டம் டிராஸ் பகுதியில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி வீரவணக்கம் செலுத்தினார்.
இதன்பின் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி பேசுகையில், “இன்று, லடாக்கின் இந்த மாபெரும் நிலம், கார்கில் வெற்றியின் 25வது ஆண்டு விழாவைக் காண்கிறது. தேசத்துக்காகச் செய்த தியாகங்கள் அழியாதவை என்பதை கார்கில் வெற்றி நமக்குச் சொல்கிறது. கடந்த கால தவறுகளில் இருந்து பாகிஸ்தான் இன்னும் பாடம் கற்கவில்லை.
கடந்த காலங்களில் பாகிஸ்தான் தனது அனைத்து மோசமான முயற்சிகளிலும் தோல்வியே கண்டது. ஆனாலும், அவற்றில் இருந்து எதையும் பாகிஸ்தான் கற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து தீவிரவாதம் போன்ற செயல்களில் ஈடுபடுகிறது. தீவிரவாதிகள் என் குரலை நேரடியாகக் கேட்கும் இடத்திலிருந்து இன்று நான் பேசுகிறேன். தீவிரவாதத்தின் ஆதரவாளர்களே... உங்களின் மோசமான நோக்கங்கள் எதுவும் வெற்றியடையாது. தீயநோக்கத்துடன் இந்தியாவை அணுகினால், இந்திய ராணுவ வீரர்கள் தங்களின் முழு பலத்துடன் தீவிரவாதத்தை நசுக்குவார்கள். எதிரிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.
அக்னிபாத் திட்டத்தின் குறிக்கோள், இந்திய ராணுவத்தை இளமையாக வைத்திருப்பதுதான். ராணுவத்தை தொடர்ந்து போருக்குத் தகுதியாக வைத்திருப்பதே அக்னிபாத் திட்டத்தின் நோக்கம். துரதிர்ஷ்டவசமாக, சிலர் தேசிய பாதுகாப்பு தொடர்பான இத்தகைய உணர்ச்சிகரமான பிரச்சினையை அரசியலில் கலக்கின்றனர். சிலர் தங்களின் சொந்த அரசியல் நலனுக்காக ராணுவத்தின் சீர்திருத்தத்திலும் அரசியல் செய்கின்றனர். பல ஆயிரம் கோடி மோசடி செய்து நமது ராணுவத்தை பலவீனப்படுத்தியது இவர்கள்தான்.
விமானப்படைக்கு நவீன போர் விமானங்கள் கிடைக்கக் கூடாது என்று விரும்பியதும் இதே நபர்கள்தான். ராணுவம் என்றால் அரசியல்வாதிகளுக்கு வணக்கம் செலுத்துவது, அணிவகுப்பு நடத்துவது என்று சிலர் நினைக்கிறார்கள், ஆனால் எங்களைப் பொறுத்தவரை ராணுவம் என்றால் 140 கோடி நாட்டு மக்களின் நம்பிக்கை.” என்று பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT