Published : 26 Jul 2024 04:11 AM
Last Updated : 26 Jul 2024 04:11 AM

மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

மக்களவையில் மத்திய அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு, காங்கிரஸ் எம்.பி. சரண்ஜித் சிங் சன்னி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. படம்: பிடிஐ

புதுடெல்லி: மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தின்போது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நேற்று கடுமையான அமளி நீடித்தது. இருஅவைகளும் அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டன.

மக்களவையில் 2024-25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த23-ம் தேதி தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் பட்ஜெட் மீதானவிவாதம் தொடங்கியது. அன்றையதினம் நடைபெற்ற விவாதத்தில், “மத்திய பட்ஜெட்டில் பிஹார், ஆந்திராவுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலான மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளன'' என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்த சூழலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று காலை 11 மணிக்கு வழக்கம்போல கூடின. மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியின் பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அஞ்சலி செலுத்தினார்.

மக்களவையில் அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசும்போது, “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனால் எதிர்க்கட்சிகள் மக்களின் தீர்ப்புக்கு மதிப்பு அளிக்கவில்லை'' என்று குற்றம் சாட்டினார். இதை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷமிட்டனர். இரு தரப்பினரையும் அவைத் தலைவர் ஓம் பிர்லா சமாதானப்படுத்தினார்.

இதன்பிறகு காங்கிரஸ் எம்பி சரண்ஜித் சிங் சன்னி பேசும்போது, “நாட்டை காக்கும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. மத்தியில் ஆளும்கூட்டணி அரசை காப்பாற்றவே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு நாள்தோறும் அவசர நிலை குறித்து பேசுகிறது. ஆனால் பஞ்சாப் விவசாயிகளை, காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று மத்திய அரசு குற்றம் சாட்டுகிறது. மணிப்பூரில் வன்முறை ஓயவில்லை. மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது. சுயேச்சை எம்பி அம்ரித்பால் சிங்தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இப்போது இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசர நிலை அமலில் இருக்கிறது” என்று குற்றம்சாட்டினார்.

அப்போது காங்கிரஸ் எம்பி சரண்ஜித் சிங் சன்னிக்கும் அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டுவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. ஆளும் கட்சி எம்பிக்கள், எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷமிட்டதால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் அவை கூடியபோது, அமைச்சர் நிஷிகாந்த் துபே பேசினார். அவர் கூறும்போது, “ஜார்க்கண்டில் முஸ்லிம்களின் மக்கள் தொகை கணிசமாக அதிகரித்து வருகிறது. பழங்குடி பெண்களை, முஸ்லிம்கள் திருமணம் செய்து மதமாற்றம் செய்கின்றனர். மேற்குவங்கத்திலும் இதேநிலை நீடிக்கிறது" என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதன்காரணமாக மக்களவை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோது எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

மாநிலங்களவையில்.. மாநிலங்களவை நேற்று தொடங்கியதும் திரிணமூல் எம்பி அபிஷேக் பானர்ஜி பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் பேசும்போது, “140கோடி மக்களுக்காக மத்தியபட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. கூட்டணி கட்சிகளை திருப்திபடுத்துவே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது" என்று குற்றம் சாட்டினார்.

ஆம் ஆத்மி எம்பி ராகவ் சத்தாகூறும்போது, “பிரிட்டனை போன்று இந்தியாவில் வரி வசூல் செய்யப்படுகிறது. ஆனால் சோமாலியாவை போன்று அடிப்படை வசதிகள் செய்யப்படுகின்றன" என்று குற்றம் சாட்டினார்.

முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்பியுமான தேவகவுடா பேசும்போது, “கர்நாடகாவின் வடக்கு கன்னட மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. அந்த மாநிலத்தில் ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசு கண்டும், காணாமல் இருக்கிறது" என்று குற்றம் சாட்டினார்.

பட்ஜெட்டில் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டி மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன்காரணமாக பிற்பகலில் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x