Published : 26 Jul 2024 05:38 AM
Last Updated : 26 Jul 2024 05:38 AM
அமராவதி: ஆந்திர மாநில சட்டப்பேரவை கூட்டத்தில், கடந்த 2014 முதல் 2024 மே மாதம் வரை சட்டம்ஒழுங்கு எப்படி இருந்தது என்பது தொடர்பான வெள்ளை அறிக்கையை முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று தாக்கல் செய்தார்.
அப்போது சந்திரபாபு நாயுடு பேசியதாவது: கடந்த 5 ஆண்டு கால ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் நரக வேதனையை அனுபவித்து வந்தனர். ஆனால் தற்போது சட்டம்-ஒழுங்கு விஷயத்தில் நாட்டிலேயே ஆந்திரா முதலிடம் வகிக்கிறது. கடந்த ஆட்சியில் பொய் வழக்கு போட்டவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவர்.
அதே சமயம், இந்த ஆட்சியில் யாரும் சட்டத்தை மீற வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். பெண்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும். சமூக வலைதளங்களில் பெண்களை தரக் குறைவாக விமர்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜெகன் ஆட்சியில் போலீஸ் துறையின் உதவியுடன் அராஜகம் அரங்கேறியது. ஜனநாயகம் சீர்குலைந்தது. போலீஸ் அதிகாரிகள் ஒய்எஸ்ஆர் காங்கிரஸுக்கு கட்டுப்பட்டு பழிவாங்கும் செயல்களுக்கு துணை போனார்கள். ஜெகன் ஆட்சியில் மட்டும் என் மீது 17வழக்குகளும், துணை முதல்வர் பவன் கல்யாண் மீது 7 வழக்குகளும் போடப்பட்டன.
அனந்தபூர் தெலுங்கு தேசம் நிர்வாகி ஜேசி திவாகர்ரெட்டி மீது 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தற்போதைய சபாநாயகர் அய்யண்ண பாத்ருடு, உள்துறை அமைச்சர் அனிதா மீது எஸ்சி, எஸ்டி வழக்குகள் பதிவாகின. எம்எல்ஏ ரகுராமராஜுவை பொய்வழக்கு போட்டு கைது செய்து சிறையில் சித்திரவதை செய்தனர். அதனை நேரடியாக ஜெகனுக்கு வீடியோ பதிவு செய்து அனுப்பினர்.இவ்வாறு சந்திரபாபு பேசினார்.
மாணவர்களுக்கு அனுமதி: நேற்று நடந்த பேரவை கூட்டத்தை காண கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, மாணவ, மாணவியர் பேரவை பார்வையாளர் பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது பேரவை எப்படி நடக்கிறது என்பதை அவர்கள் நேரில் கண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT