Published : 25 Jul 2024 07:20 PM
Last Updated : 25 Jul 2024 07:20 PM

நீட் முடிவுகள் 2024: சிகார், நாமக்கல், கோட்டா ‘பயிற்சி மையங்கள்’ அதிக மதிப்பெண்களுடன் ஆதிக்கம்

புதுடெல்லி: இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை நீட் தேர்வில் சிகார், நாமக்கல், கோட்டா நகரங்களில் செயல்படும் ‘பயிற்சி மையங்களில்’ படித்த மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றிருப்பது தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள தரவுகளில் இருந்து தெரிய வருகிறது.

இளநிலை நீட் தேர்வுக்கான மொத்த மதிப்பெண்கள் 720. இதில் 650-க்கு மேல் மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம். அந்த வகையில் 650-க்கும் மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களாக ராஜஸ்தானின் சிகார், தமிழகத்தின் நாமக்கல், கேரளாவின் கோட்டையம், ஆந்திராவின் தனுக்கு, ராஜஸ்தானின் ஜுன்ஜுனு, ஹரியாணாவின் குருஷேத்ரா நகரங்களில் செயல்படும் பயிற்சி மையங்களில் படித்த மாணவர்கள் உள்ளனர்.

இளநிலை நீட் தேர்வில் 650-க்கும் அதிகமாக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களில் சிகார் நகர மாணவர்கள் முதலிடத்தில் உள்ளனர். இந்த நகரத்தைச் சேர்ந்த 2,037 மாணவர்கள் (7.5%) 650-க்கும் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். அடுத்ததாக, நாமக்கல்லைச் சேர்ந்த 313 மாணவர்கள் (5.1%) 650-க்கும் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். மூன்றாவது இடத்தை கோட்டயம் பெற்றுள்ளது. இந்த நகரைச் சேர்ந்த தேர்வெழுதிய மாணவர்களில் 544 பேர் (4.4%) 650க்கும் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். தனுக்கு நகரைச் சேர்ந்த 41 (4.1%) மாணவர்களும், ஜுன்ஜுனு நகரைச் சேர்ந்த 196 (3.96%) மாணவர்களும், குருஷேத்ராவைச் சேர்ந்த 196 மாணவர்களும் (3.96%) 650-க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

ராஜஸ்தானில் புகழ்பெற்ற பயிற்சி மையமான கோட்டாவில் 1,066 பேர் 650 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். இது சிகாருக்குப் பிறகு இரண்டாவது அதிகபட்ச முழுமையான எண்ணிக்கையாகும்.

சிகாரில் இருந்து 149 பேர் (0.55%) 700 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். இது எந்த நகரத்திலும் இல்லாதது. இரண்டாவது இடத்தை ஜெய்ப்பூரும் (131 மாணவர்கள்), மூன்றாவது இடத்தை டெல்லியும் (120), 4-வது இடத்தை கோட்டா-வும் (74), 5-வது இடத்தை பெங்களூருவும் (74) பிடித்துள்ளன. கோட்டயம் (61), அகமதாபாத் (53), விஜயவாடா (50), புனே (41), சென்னை (41) ஆகியவை 6 முதல் 10 வரையிலான இடங்களைப் பிடித்துள்ளன. நாமக்கல்லில் 31 பேர் (0.52%) 700 அல்லது அதற்கு மேல் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 650 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்றவர்களில் நாமக்கல்தான் அதிக பங்கினைக் கொண்டுள்ளது. மாநிலத்தில் நீட் தேர்வுக்கு ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க எதிர்ப்பை இது வெளிப்படுத்துகிறது. நீட் நடைமுறைக்கு முன், நாமக்கல் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் "டாப்பர்களை" உருவாக்கிய "சூப்பர்" நகராக இருந்தது. இப்போது, ​​இந்த நகரம் நீட்/ஜேஇஇ தேர்வுகளுக்கான விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்சி நிறுவனங்களின் மையமாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x