Published : 25 Jul 2024 06:52 PM
Last Updated : 25 Jul 2024 06:52 PM

“ஜெகனுக்கு அம்பானியை விட பணக்காரர் ஆக ஆசை!” - ‘டான்’ உடன் ஒப்பிட்டு சந்திரபாபு நாயுடு பேச்சு

அமராவதி: ஜெகன் மோகன் ரெட்டியை கொலம்பிய போதைப்பொருள் டான் உடன் ஒப்பிட்டு சட்டப்பேரவையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசை கண்டித்து டெல்லியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி நேற்று போராட்டம் நடத்தினார். "ஆந்திராவில் சட்டம் - ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டு விட்டது. சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி அரசு, எதிர்க்கட்சியினருக்கு எதிராக பழி வாங்கும் செயலில் ஈடுபடுகிறது.

சந்திரபாபு நாயுடுவின் மகனும் அமைச்சருமான லோகேஷ், ‘ரெட் புக்’ கில் உள்ள எதிர்க்கட்சியினரை பழி வாங்குவேன் என மிரட்டுகிறார். நாங்கள் ஆட்சியில் இருந்த கடந்த 5 ஆண்டுகளில் இதுபோன்று பழிவாங்கும் அரசியலில் ஈடுபட வில்லை. அக்கட்சி ஆட்சிக்கு வந்த 45 நாட்களிலேயே எங்கள் கட்சியைச் சேர்ந்த 35 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்" என்றும் போராட்டத்தின்போது ஜெகன் மோகன் ரெட்டி பேசினார்.

ஜெகன் மோகன் ரெட்டியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக இன்று ஆந்திர சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, "ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியின்போது, ​​வழக்குகள் உள்ளவர்கள் எழுந்து நில்லுங்கள்" என்றார். அவர் கூறியதும் கிட்டத்தட்ட 80% எம்எல்ஏக்கள் சட்டசபையில் எழுந்து நின்றனர். அத்தனை பேர் மீதும் ஜெகன் மோகன் ரெட்டி அரசு வழக்குப் பதிந்தது என்பதை சுட்டிக்காட்டவும், ஜெகன் அரசில் சட்டம் - ஒழுங்கு எப்படி இருந்தது என்பதை காட்டவும் நிற்க சொன்னதாக சந்திரபாபு நாயுடு கூறினார். இதனால் சட்டப்பேரவையில் சிரிப்பலைகள் எழுந்தன.

தொடர்ந்து சட்டப்பேரவையில் ஜெகன் குறித்து பேசிய சந்திரபாபு நாயுடு, அவரை கொலம்பிய போதைப்பொருள் டான் உடன் ஒப்பிட்டு பேசினார். சந்திரபாபு நாயுடு பேசும்போது, "பாப்லோ எஸ்கோபர் ஒரு கொலம்பிய போதைப்பொருள் டான். அவர் ஒரு போதைப்பொருள் பயங்கரவாதி. ஆனால், பின்னாளில் அவர் அரசியல்வாதியாக மாறி அதன்பின்னரும் போதைப்பொருள் விற்றுவந்தார். 1970 காலகட்டத்திலேயே பாப்லோ எஸ்கோபர் 30 பில்லியன் டாலர்கள் சம்பாதித்தான். இப்போது அதன் மதிப்பு 90 பில்லியன் டாலர்கள். அவன் 1976-ல் கைது செய்யப்பட்டான். எனினும், 1980-ம் ஆண்டு போதைப்பொருள் விற்பனை செய்வதன் மூலம் உலகின் பணக்காரர் வரிசையில் இடம்பிடித்தான்.

முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் நோக்கம் என்ன? டாடா, ரிலையன்ஸ், அம்பானியைவிட பணக்காரர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டார். சிலருக்கு தேவைகள் இருக்கும், சிலருக்கு பேராசை இருக்கும் மற்றும் சிலருக்கு வெறி இருக்கும், இந்த வெறி பிடித்தவர்கள்தான் இதுபோன்ற விஷயங்களைச் செய்கிறார்கள்" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x