Published : 25 Jul 2024 08:40 PM
Last Updated : 25 Jul 2024 08:40 PM
மும்பை: மகாராஷ்டிராவின் புனே, மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சியோன், செம்பூர், அந்தேரி போன்ற பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்திருக்கும் நிலையில், கனமழை காரணமாக பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மகாராஷ்டிர மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதில் மும்பை உள்ளிட்ட இடங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டன. தற்போதும் அதேபோன்றொரு கனமழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரை மும்பைக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ள வானிலை மையம், சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது.
ஏற்கனவே பெய்த கனமழை காரணமாக மும்பை நகருக்கு தண்ணீர் வழங்கும் ஏழு ஏரிகளில் மோடக்-சாகர் ஏரி மற்றும் விஹார் ஏரி என்ற இரண்டு ஏரிகள் நிரம்பி வழிந்துவருகின்றன. நகர் பகுதியில் விட்டுவிட்டு கனமழை பெய்வதால் வெள்ளநீர் தேங்கி, போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் பல கிலோ மீட்டருக்கு மெதுவாக ஊர்ந்து செல்லும் சூழல் நிலவுகிறது.
புனேவில் கடும் பாதிப்பு: மும்பை மட்டுமல்ல தானே, புனே என மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் கனமழை பெய்துவருகிறது. தானேயில் மும்ப்ரா போன்ற சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. புனேவில், பிம்ப்ரி, சிந்த்வாட்டில் உள்ள பல குடியிருப்பு வளாகங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதுதவிர புனே மாவட்டத்தில் லவாசா மலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு ஏற்பட்ட இடத்துக்கு 18 கி.மீ முன்பே சாலையில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் கனமழையின் தீவிரம் அதிகமாக இருந்துவரும் நிலையில், பாதிப்பும் அதிகமாக உள்ளன.
வானிலை ஆய்வு மையம், புனே மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. புனே நகரம், வெல்லா, முல்ஷி, போர் தாலுகா மற்றும் பல்வேறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் புதன்கிழமை இரவு முழுவதும் கனமழை பெய்தது. இதனால், நகரத்தின் தாழ்வான பகுதிகளான சிங்ககட் சாலை, பவதான், பானர் மற்றும் டெக்கான் ஜிம்கானா முதலானவற்றில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தன.
அணைகளில் நீர் வெளியேற்றம்: புனே மாவட்ட ஆட்சியர் சுஹாஸ் திவாஸ் கூறும்போது: "காடக்வாஸ்லா அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணையில் இருந்து 35,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், இது 45,000 கன அடியாக அதிகரிக்கப்படும். நீர் வெளியேற்றம் காரணமாக முத்தா ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையால் மேலும் வெள்ளம் ஏற்படும் என அஞ்சப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மேலாண்மை பிரிவினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். அவசியம் இல்லாதபட்சத்தில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்” என்று தெரிவித்தார்.
4 பேர் உயிரிழப்பு: மழை பாதிப்புகள் தொடர்பான சம்பவங்கள் காரணமாக 4 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். டெக்கான் பகுதியில், தங்களின் முட்டை விற்கும் தள்ளு வண்டியை நகர்த்த முயன்றபோது மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். முல்ஷி தேஹ்சில் பகுதியின் தாமினி காட் பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவினால் ஒருவர் உயிரிழந்தார்; மற்றொருவர் காயமடைந்துள்ளார் என மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீட்புப் பணிகள்: "மாநில பேரிடர் படையுடன் இணைந்து தேசிய பேரிடர் படையும் இணைந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. ராணுவத்திடமும் பேசியுள்ளோம். தேவைப்பட்டால் ராணுவம் அழைக்கப்படும். நான் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறேன். மும்பைவாசிகளிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். வீட்டிலேயே இருங்கள், தேவைப்பட்டால் மட்டும் வெளியே செல்லுங்கள்." என்று மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
ராணுவம் வரவழைப்பு: கனமழையால் புனேவின் நிலைமை மோசமான நிலையில் மீட்புப்பணிகளுக்காக ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. புனேவின் சிங்ககட் பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்ததால் சிக்கிக்கொண்டிருந்த 400 பேரை ராணுவம் மீட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது. கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிங்ககட் பகுதியில் மீட்பு பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தேவைப்பட்டால் ஹெலிகாப்டர் வசதிகொண்ட ஏர்லிப்ட் பயன்படுத்தி மக்களை மீட்க மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
விமானங்கள் ரத்து: கனமழை காரணமாக மும்பையில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் போன்ற விமானங்கள் மும்பைக்கான விமான சேவையை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT