Published : 25 Jul 2024 03:54 PM
Last Updated : 25 Jul 2024 03:54 PM
புதுடெல்லி: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3, 4 அலகுகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தை 100% தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி வில்சன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக எரிசக்தி பாதுகாப்பு திட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று (ஜூலை 25) சிறப்பு கவன உரையாற்றிய அவர், “தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமானது, ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் 800 மெகாவாட் திறன் கொண்ட இரு அனல் மின் நிலைய திட்டங்களைத் துவக்கியுள்ளது. அதேபோன்று, 1320 மெகாவாட் திறன் கொண்ட உடன்குடி நிலை-1 ஆனது முடிவுறும் தருவாயில் உள்ளது. மேலும், உடன்குடி நிலை-2 மற்றும் நிலை-3 மூலம் 2640 மெகாவாட் மின் உற்பத்திக்கும் சாத்தியம் உள்ளது. மாநில அரசாங்கமானது இதற்கான நிர்வாக அனுமதியை வழங்கியுள்ளது.
நிலக்கரி அணுகு தோணித்துறை மற்றும் மூடிய கன்வேயர் அமைப்புகள் உட்பட தற்போதுள்ள நிலக்கரி கையாளுதல் உள்கட்டமைப்புகள் மூன்று நிலைகளிலும் நடைமுறையில் உள்ளது. மாநில அளவிலான திட்டங்களின் மேம்பாடு மாநில வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்பதைக் கருத்தில் கொண்டு, என்.டி.பி.சி மற்றும் என்.எல்.சி ஆகியவை ₹30,000 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டங்களை மேம்படுத்த மாநில அரசால் முன்மொழியப்பட்டுள்ளது.
தற்போதுள்ள மின்பகிர்மான வழித்தடங்களின் திறன் கிட்டத்தட்ட அதிகபட்சமாக இருப்பதால், உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழ்நாடு மற்றும் பிற தென் மாநிலங்கள் பயன்படுத்த முடியும். மேலும் புதிய வழித்தடங்களை நிறுவுவதற்கு 8-10 ஆண்டுகள் ஆகக்கூடும். இந்த திட்டங்களை என்.டி.பி.சி மற்றும் என்.எல்.சி நிறுவனங்கள் செயல்படுத்துவது தமிழ்நாடு மற்றும் பிற தென் மாநிலங்களின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தும். மேலும், தமிழ்நாட்டின் மின் தேவை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் அதிக விகிதத்தில் அதிகரித்து வருகிறது. 2025-26 ஆம் ஆண்டில் உச்ச மின் தேவை 21,000 மெகாவாட்டை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் மற்றும் இரண்டாவது அலகுகளிலிருந்து சுமார் 55%, அதாவது 1150 மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே தமிழகம் பெறுகிறது. மூன்று மற்றும் நான்காவது அலகுகள் 2025-க்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதால், அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்யவும், மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்கவும், இந்த 3 மற்றும் 4-ம் அலகுகளில் இருந்து 100 விழுக்காட்டினை தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது" என்று அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT