Published : 25 Jul 2024 02:40 PM
Last Updated : 25 Jul 2024 02:40 PM
புனே: மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மழை பாதிப்பு சம்பவங்களால் 4 பேர் உயிரிழந்தனர். நகரின் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் அப்பகுதிகளில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய வானிலை ஆய்வு மையம், புனே மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. புனே நகரம், வெல்லா, முல்ஷி, போர் தாலுகா மற்றும் பல்வேறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் புதன்கிழமை இரவு முழுவதும் கனமழை பெய்தது.
இதனால், நகரத்தின் தாழ்வான பகுதிகளான சிங்ககட் சாலை, பவதான், பானர் மற்றும் டெக்கான் ஜிம்கானா முதலானவற்றில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தன. அங்கு தீயணைப்பு வீரர்களும், பேரிடர் மேலாண்மை பிரிவினரும் மீட்பு பணிகளைத் தொடங்கி உள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அணைகளில் நீர் வெளியேற்றம்: புனே மாவட்ட ஆட்சியர் சுஹாஸ் திவாஸ் கூறும்போது: "காடக்வாஸ்லா அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணையில் இருந்து 35,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், இது 45,000 கன அடியாக அதிகரிக்கப்படும். நீர் வெளியேற்றம் காரணமாக முத்தா ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையால் மேலும் வெள்ளம் ஏற்படும் என அஞ்சப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மேலாண்மை பிரிவினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். அவசியம் இல்லாதபட்சத்தில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்” என்று தெரிவித்தார்.
4 பேர் உயிரிழப்பு: இதனிடையே, மழை பாதிப்புகள் தொடர்பான சம்பவங்கள் காரணமாக 4 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். டெக்கான் பகுதியில், தங்களின் முட்டை விற்கும் தள்ளு வண்டியை நகர்த்த முயன்றபோது மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். முல்ஷி தேஹ்சில் பகுதியின் தாமினி காட் பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவினால் ஒருவர் உயிரிழந்தார்; மற்றொருவர் காயமடைந்துள்ளார் என மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
லாவாசா பகுதியில் ஏற்பட்ட மற்றொரு மண்சரிவு சம்பவத்தில் மூன்று பேர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாக போலீஸார் தெரிவித்தனர். கேத்-ன் காட் பகுதிகள், ஜுன்னார், அம்பேகான், வெல்தா, முல்ஷி, மாவல், போர், ஹாவெலி தாலுகா மற்றும் பிம்பிரி சின்ச்வாத் பகுதிகளில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மாவட்டத்தின் லோனாவாலா மலைப் பகுதிக்கு அருகில் உள்ள மலாவ்லியில் உள்ள ரெசார்ட் மற்றும் பங்களாக்களில் வெள்ளம் காரணமாக சிக்கியிருந்த 29 சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதல்வர் அஜித் பவார், மழை நிலவரம் குறித்து கேட்டறிந்து மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT