Published : 25 Jul 2024 12:28 PM
Last Updated : 25 Jul 2024 12:28 PM
புதுடெல்லி: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
இண்டியா கூட்டணியின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பகவந்த் மான் கலந்து கொள்ள மாட்டார் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
மத்திய பட்ஜெட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லாத கட்சிகள் ஆளும் மாநிலத்திற்கு போதிய நிதி ஒதுக்கவில்லை என்றும், மத்திய பட்ஜெட் பாரபட்சமானது என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், ஆம் ஆத்மி இந்த முடிவை எடுத்துள்ளது.
மத்திய பட்ஜெட்டில் தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை என்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதன்முதலாக சென்னையில் புறக்கணிப்பு முடிவை அறிவித்தார். இதைத் தொடர்ந்து, இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவித்தது.
ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்வார் என்றும், மேற்கு வங்கத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகளை மத்திய அரசு உடனே விடுவிக்க வலியுறுத்துவதற்கு இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட் மாநிலங்களுக்கு இடையே பாரபட்சம் காட்டி இருப்பதாகக் குற்றம் சாட்டி எதிர்க்கட்சிகள் நேற்று (ஜூலை 24) நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்சினையை எழுப்பின. மாநிலங்களவையில் முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரமும், மக்களவையில் காங்கிரஸ் எம்.பி குமாரி செல்ஜாவும் விவாதத்தை நேற்று தொடங்கி வைத்தனர். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு மாநிலங்களவையில் பதில் அளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “எந்த ஒரு மாநிலத்துக்கும் பாரபட்சம் காட்டப்படவில்லை” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 22ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12-ம் தேதி முடிவடைகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...