Published : 25 Jul 2024 04:27 AM
Last Updated : 25 Jul 2024 04:27 AM
புதுடெல்லி: மரபணு மாற்றப்பட்ட கடுகு களப் பரிசோதனைக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கி உள்ளது. இதையடுத்து, இந்த வழக்கு கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் தீபக் பென்டல் மரபணுமாற்றப்பட்ட கடுகை உருவாக்கினார். அதிக மகசூல் தரும் இதை பயிரிட்டால் சமையல் எண்ணெய் இறக்குமதி கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு (ஜிஇஏசி) அளித்த பரிந்துரையின் அடிப்படையில், டிஎம்எச்-11 என பெயரிடப்பட்டுள்ள இந்த ரகத்தை களப் பரிசோதனை செய்ய மத்தியசுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் டெல்லி பல்கலைக்கழகத்துக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கியது.
இந்த அனுமதியை எதிர்த்து, ஜீன் கேம்பெய்ன் என்ற தொண்டு நிறுவனம் மற்றும் அருணா ராட்ரிக்ஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டது.
இந்த மனு மீதான விசாரணையின்போது, களப் பரிசோதனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. விசாரணை முடிந்த நிலையில், நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று முன் தினம் தீர்ப்பு வழங்கியது. இவர்கள் இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.
இதையடுத்து, இந்த வழக்கை கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றுமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் கூடுதல் அமர்வு தீர்ப்பு வழங்கும் வரை, கள ஆய்வுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடைதொடரும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கான ஆராய்ச்சி, சாகுபடி, வர்த்தகம் செய்வது தொடர்பாக தேசிய அளவிலான ஒரு கொள்கையை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என இரு நீதிபதிகளும் ஒருமனதாக உத்தரவிட்டனர்.
நீதிபதி நாகரத்னா வழங்கிய தீர்ப்பில், “மரபணு மாற்றப்பட்ட கடுகை களப் பரிசோதனைக்கு ஜிஇஏசி பரிந்துரை செய்தது செல்லாது. இது பொது நம்பிக்கை கொள்கையை மீறுவதாக உள்ளது. மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு இந்த கடுகு பாதிப்பை ஏற்படுத்துமா என ஆராயப்படவில்லை. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த நிபுணர் குழுவின் பரிந்துரைகளை ஜிஇஏசி புறக்கணித்துள்ளது” என கூறப்பட்டுள்ளது.
நீதிபதி சஞ்சய் கரோல் வழங்கிய தீர்ப்பில், “மரபணு மாற்றப்பட்ட கடுகு களப் பரிசோதனைக்குஅனுமதி அளித்தது முன்னெச்சரிக்கை கொள்கையை மீறும் செயல் அல்ல. போதுமான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் களப் பரிசோதனையை தொடரலாம்” என கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT