Published : 25 Jul 2024 04:33 AM
Last Updated : 25 Jul 2024 04:33 AM

நீட் வழக்கு: வாக்குவாதத்தில் ஈடுபட்ட மூத்த வழக்கறிஞரை எச்சரித்த தலைமை நீதிபதி சந்திரசூட்

தலைமை நீதிபதி சந்திரசூட்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் குறுக்கிட்டு இடையூறு செய்த மூத்த வழக்கறிஞரை அறையில் இருந்து வெளியேற்றும்படி காவலர்களுக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டதால் பரபரப்பு நிலவியது.

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று முன்தினம் விசாரித்துக் கொண்டிருந்தார்.

மனுதாரர்களில் ஒருவர் சார்பில் வழக்கறிஞர் நரேந்தர் ஹூடா ஆஜராகி வாதிடும்போது, மற்றொரு மூத்த வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பரா குறுக்கிட்டார். இதற்கு தலைமை நீதிபதி, ஹூடா தனது வாதத்தை முடித்தவுடன் பேசும்படி கூறினார்.

இதற்கு நெடும்பரா, “இங்கு இருப்பவர்களில் நான்தான் மிக மூத்த வழக்கறிஞர். அவருக்கு என்னால் பதில் கூறமுடியும். நான் நீதிமன்றத்தின் நண்பன்” என்றார்.

உடனே தலைமை நீதிபதி, “அப்படி யாரையும் நான் நியமிக்கவில்லை” என்றார்.

இதற்கு நெடும்பரா, “என்னை அவமதித்தால் நான் இங்கிருந்து வெளியேறிவிடுவேன்” என்றார்.

இதனால் ஆத்திரம் அடைந்த தலைமை நீதிபதி, “உங்களை எச்சரிக்கிறேன். இங்கு நான்தான் தலைமை வகிக்கிறேன். காவலர்களே! இவரை இங்கிருந்து அகற்றுங்கள்” என்றார்.

இதற்கு நெடும்பரா, ‘‘நானே இங்கிருந்து செல்கிறேன்” என்றார்.

உடனே தலைமை நீதிபதி, “அதை சொல்லத் தேவையில்லை. நீங்கள் இங்கிருந்து செல்லலாம். கடந்த 24 ஆண்டுகளாக நீதித்துறையை பார்க்கிறேன். நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆணையிட அனுமதிக்க முடியாது” என்றார்.

இதற்கு நெடும்பரா “நான் 1979-ல் இருந்தே பார்த்து வருகிறேன்” என்றார். இதனால் மேலும் கோபமடைந்த சந்திரசூட், “இதுபோல் தொடர்ந்து பேசினால் நீதிமன்ற அவமதிப்பு உத்தரவு பிறப்பிக்க நேரிடும்” என எச்சரித்தார்.

மன்னிப்பு கேட்ட வழக்கறிஞர்: இதையடுத்து அங்கிருந்து வெளியேறிய நெடும்பரா, பிறகுநீதிமன்றத்துக்கு திரும்பி வந்துதலைமை நீதிபதியை அவமதித்ததற்காக மன்னிப்பு கோரினார்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் மேத்யூஸ் நெடும்பரா குறுக்கிடுவது இது முதல்முறையல்ல. இதற்கு முன் கடந்த ஆண்டு மார்ச்சில் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கு விசாரணையில் குறுக்கிட்டு பேசியஅவரை தலைமை நீதிபதி கண்டித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x