Published : 25 Jul 2024 05:42 AM
Last Updated : 25 Jul 2024 05:42 AM
புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி தொண்டர் கொலை வழக்கில்தேடப்பட்டு வந்த பாஜக கவுன்சிலரை போலீஸார் என்கவுன்ட்டர் நடத்தி கைது செய்தனர்.
உ.பி.யின் கோண்டா மாவட்டம் பராஸ்பூரை சேர்ந்தவர் மொஹல்லா ராஜா ஓம் பிரகாஷ் சிங் (45). சமாஜ்வாதி கட்சி தொண்டரான இவர் கடந்த வெள்ளிக்கிழமை கழுத்து அறுத்துக் கொல்லப்பட்டார்.
வீட்டில் தனியாக இருந்தபோது பட்டப்பகலில் நடந்த இக்கொலை தொடர்பாக பாஜக கவுன்சிலர் உதய்பான்சிங் எனும் லல்லன்சிங் மற்றும் அவரது 2 மகன்கள் மீது புகார் அளிக்கப்பட்டது.
இவர்களை கைது செய்யும் வரை ஓம் பிரகாஷ் உடலை தகனம் செய்ய அவரது குடும்பத் தினர் மறுத்தனர். மேலும் உடலை சாலையில் வைத்து மறியல் போராட்டம் நடத்தினர். குற்றவாளிகளுக்கு கோண்டா போலீஸார் உதவுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
ரூ.5 லட்சம் நிதியுதவி: இந்தப் போராட்டத்தை சமாஜ்வாதி நிர்வாகிகள் நேரில் வந்து முடித்து வைத்தனர். கட்சி சார்பில் ஓம் பிரகாஷ் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கினர். அப்போது வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என ஓம்பிரகாஷின் மனைவி வலியுறுத்தினார்.
இதையடுத்து குற்றவாளிகள் நால்வரில் சந்தன்சிங், ரோஹித்சிங் ஆகிய இருவரை கோண்டா போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். தலைமறைவான பாஜக கவுன்சிலர் உதய்பான்சிங் பற்றிய தகவலுக்கு ரூ.25,000 பரிசு அறிவித்தனர்.
இந்நிலையில் கோண்டாவின் நவாப்கஞ்ச் சாலையில் நேற்று காலையில் இருசக்கர வாகனத்தில் வந்த உதய்பான்சிங்கை போலீஸார்சுற்றி வளைத்தனர். அப்போது போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோட முயன்ற உதய்பான் மீதுஎன்கவுன்ட்டரும் நடத்தப்பட்டது. இதில் காலில் காயங்களுடன் உதய்பான் கைது செய்யப்பட்டு, கோண்டா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
முன்விரோதமே இந்த கொலைக்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது. பராஸ்பூரில் உதய்பான்சிங் வீட்டின் சுற்றுச்சுவர் சட்டவிரோதமானது என ஓம் பிரகாஷ் புகார் அளித்திருந்தார். இதில் கோண்டா போலீஸார் முன்னிலையில் உதய்பான் வீட்டின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த பாஜக கவுன்சிலர் உதய்பான், ஓம் பிரகாஷை கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT