Published : 25 Jul 2024 05:54 AM
Last Updated : 25 Jul 2024 05:54 AM
அமராவதி: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசை கண்டித்துடெல்லியில் உள்ள ஜந்தர்-மந்தர் அருகே நேற்று போராட்டத்தில் ஈடுபட்டார். இதில் அவரது கட்சியைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது ஜெகன் பேசியதாவது:
ஆந்திராவில் சட்டம்-ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டு விட்டது. சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி அரசு, எதிர்க்கட்சியினருக்கு எதிராக பழி வாங்கும் செயலில் ஈடுபடுகிறது. சந்திரபாபு நாயுடுவின் மகனும் அமைச்சருமான லோகேஷ், ‘ரெட் புக்’ கில் உள்ள எதிர்க்கட்சியினரை பழி வாங்குவேன் என மிரட்டுகிறார். நாங்கள் ஆட்சியில் இருந்த கடந்த 5 ஆண்டுகளில் இதுபோன்று பழிவாங்கும் அரசியலில் ஈடுபட வில்லை. அக்கட்சி ஆட்சிக்கு வந்த 45 நாட்களிலேயே எங்கள் கட்சியைச் சேர்ந்த 35 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அரசு, தனியார் சொத்துகள் நாசம் செய்யப்பட்டு வருகின்றன. ஆந்திராவில் ஜனநாயகம் உள்ளதா? எனும் கேள்வி எழுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
திருமாவளவன் பேச்சு: ஜெகன்மோகன் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசிய தாவது:
ஆந்திராவில் நடக்கும் அராஜகத்தின் புகைப்படங்கள், வீடியோபதிவுகளை பார்த்து அதிர்ச்சியுற்றேன். இவை திட்டமிட்டு செய்யும் செயல். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த செயல்களுக்கு மத்திய அரசும் இலைமறை காயாக உதவுகிறது.
ஆந்திராவில் சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற வேண்டும். நாங்கள் ஜெகன் கட்சிக்கு உறுதுணையாக நிற்போம். சட்டம்-ஒழுங்கை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெகன்மோகன் இண்டியா கூட்டணியில் இணைய வேண்டும். இண்டியா கூட்டணி கட்சியினர் ஜெகனுக்கு ஆதரவு தர முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் ஜெகன் போராட்டத்துக்கு சமாஜ்வாதி, திரிணமூல் காங்கிரஸ், அதிமுக, விசிக, ஆம் ஆத்மி, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் அனிதா அமராவதியில் நேற்று மாலை கூறும்போது, ‘‘ஜெகன்மோகன் ரெட்டி தர்னா போராட்டம் எனும் பெயரில் ஒரு அரசியல் நாடகத்தை அரங்கேற்றி உள்ளார். அவரது ஆட்சியில் ஜெகனையோ அல்லது அவரது கட்சியினரையோ எதிர்த்துப் பேசுபவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டன. பலர் கொல்லப்பட்டனர். நானும் ஜெகன் அரசால் பாதிக்கப்பட்டேன். ஜெகன் கூறுவதுபோல் அவரது கட்சியினர் 35 பேர்கொல்லப்பட்டிருந்தால், அந்தபட்டியலை உள்துறை அமைச்சரானஎன்னிடம் தர வேண்டும். நடந்தது4 கொலைகள், அதில் 3 தெலுங்குதேசம் கட்சியினர் கொல்லப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் விவரத்தை ஜெகன்தான் தெரிவிக்க வேண்டும்’’ என்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT