Published : 19 Aug 2014 12:00 AM
Last Updated : 19 Aug 2014 12:00 AM

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா தரப்பு இறுதி வாதம் நிறைவு

ஜெயலலிதா மீதான‌ சொத்துக்குவிப்பு வழக்கில் இரண்டாம் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சசிகலா தரப்பின் இறுதி வாதம் பெங்களூர் சிறப்புநீதிமன்றத்தில் திங்கள்கிழமை நிறைவடைந்தது.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய நால்வர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு, பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

வழக்கில் இரண்டாம் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கர் தனது 9-வது நாள் வாதத்தை தொடங்கினார்.

அவர் வாதிட்டதாவது:

1991-96 ஆண்டு காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் ரூ 66 கோடி சொத்து குவித்ததாக,தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.ஜெயலலிதா முறைகேடாக சம்பாதித்த பணத்தை சசிகலா,சுதாகரன்,இளவரசி ஆகியோர் பெயரில் சொத்துகளாக மாற்றியதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஜெயலலிதா,சசிகலா உள்ளிட்ட நால்வரும் தங்களுடைய சொந்த வருமானத்தின் மூலமாகவும், தாங்கள் நடத்திய நிறுவனங்களின் மூலம் கிடைத்த வருமானத்தின் மூலமாகவுமே சொத்துகளை வாங்கியுள்ளனர்.அவர்கள் வாங்கிய அனைத்து சொத்துகளும் வங்கி மூலமாகவும், காசோலைகள் மூலமாகவுமே வாங்கப்பட்டிருக்கிறது. இதற்கான

கணக்குகள் அனைத்தும் அந்தந்த ஆண்டில் வருமான வரித்துறையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இவ்வழக்கு தொடர்பான விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்டவர்களின் வங்கி கணக்குகள், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், வாகனங்கள், தனியார் நிறுவனங்களின் உபகரணங்கள் என ரூ.11 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கினர். அவர்கள் முடக்கிய சொத்துகளில் பெரும்பாலானவை வழக்கில் நேரடியாக தொடர்பில்லாத மூன்றாம் தரப்பினரின் சொத்துகள். ஆதலால் கடந்த மே மாதம் பெங்களூர் நீதிமன்றம் அந்த சொத்துகளை விடுவித்தது. இதன் மூலம் இவ்வழக்கில் இருந்து ரூ.11 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

இதைப் போலவே தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அப்போதைய அரசின் (திமுக) தூண்டுதலின் காரணமாகவும், ஜெயலலிதா மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் வழக்கை பலவிதமாக புனைந்துள்ளனர். ஜெயலலிதா உள்ளிட்டோரின் சொத்து மதிப்பை அதிகமாக காட்ட வேண்டும் என்பதற்காக,அவர்களுடைய நிறுவனங்களின் மூலம் வந்த வருமானத்தை மறைத்துள்ளனர்.

அன்பழகன் காட்டிய பொய்க்கணக்கு

இவ்வழக்கில் 3-ம் தரப்பான திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த இறுதிவாதத்தில் தெரிவித்துள்ள 40 சதவீத கணக்குகள் பொய்யானவை. ஒரே தேதியில் வங்கியில் பெற்ற பணத்தை வெவ்வேறு தேதிகளில் பெற்றதாக பொய்யாக தெரிவித்துள்ளனர். பல இடங்களில் பண பரிவர்த்தனைகளில் ஈடுபட்ட

ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் பெயரைக் கூட பிழையாக குறிப்பிட்டுள்ளனர்.வங்கியில் இருந்து பெறப்பட்ட ஆதாரத்தின்படி பார்த்தால், அன்பழகன் தரப்பில் 120 பொய்யான பண பரிவர்த்தனைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். ஆதலால் அவர்கள் பணபரிவர்த்தனைகள் தொடர்பாக தாக்கல் செய்துள்ள விவரங்களை வங்கியில் இருக்கும் பணபரிவர்த்தனை விவரத்துடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். மொத்தத்தில் இவ்வழக்கு தவறான நோக்கத்துடன், பொய்யாக ஜோடிக்கப்பட்டது'' எனக்கூறி தனது இறுதிவாதத்தை நிறைவு செய்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதி டி'குன்ஹா, 'கூட்டுசதி குற்றச்சாட்டில் இருந்து நீக்கக்கோரும் ஜெயலலிதாவின் மனு மீது செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெறும்.அதன்பிறகு சுதாகரன் மற்றும் இளவரசி தரப்பின் இறுதிவாதம் தொடங்கும்''என்றார்.

36 மணி நேர இறுதி வாதம்

நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கர்,

`தி இந்து'விடம் பேசும்போது, ''9 நாட்களில், 36 மணி நேரம் தொடர்ந்து எங்களுடைய தரப்பு வாதத்தை நீதிமன்றத்தில் எடுத்து வைத்துள்ளேன்.

நீதிபதி அனைத்து விவரங்களையும் கவனமுடன் பதிவு செய்துகொண்டார். முழு மன திருப்தியுடன் வாதிட்டு இருக்கிறேன்''என்றார்.​

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x