Published : 24 Jul 2024 08:57 PM
Last Updated : 24 Jul 2024 08:57 PM
புதுடெல்லி: “தமிழக ரயில் திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் இந்த ஆண்டு 6,362 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது” என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 1-ல் 2024-25 நிதியாண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டில் வெளியிட்ட அறிவிப்புகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக ரயில் திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் இந்த ஆண்டு 6,362 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, கடந்த 2009 முதல் 2014 வரையிலான ஐந்தாண்டுகளில் ஒதுக்கப்பட்ட 879 கோடி ரூபாயைவிட 7 மடங்கு அதிகம். 2014 முதல் 2024 வரையிலான 10 ஆண்டுகளில் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட தமிழகத்தில் 1,302 கிமீ தொலைவுக்கு புதிய ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டிருப்பதுடன் 2,152 கிமீ தொலைவுக்கான ரயில் வழித்தடம் மின்மயமாக்கப்பட்டுள்ளது. 687 ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது ரூ.33,467 கோடி மதிப்பீட்டில் 2,587 கிமீ தொலைவுக்கு புதிய பாதை அமைப்பதற்கான 22 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை எழும்பூர், சென்னை கடற்கரை, எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல், சென்னை பூங்கா, அம்பத்தூர், ஆவடி, பெரம்பூர், மாம்பலம், கிண்டி, தாம்பரம், குரோம்பேட்டை, அரக்கோணம், அரியலூர், கோவை சந்திப்பு, கோயம்புத்தூர் வடக்கு, மதுரை, ஜோலார்பேட்டை, ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம், நாகர்கோவில், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்செந்தூர், திருப்பூர். திருவண்ணாமலை, வேலூர், சேலம் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள 77 ரயில் நிலையங்கள் அமிர்த ரயில் நிலையங்களாக மேம்படுத்தப்பட உள்ளது.
இதே போன்று தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட கேரள மாநில ரயில்வே திட்டங்களுக்கு இந்த ஆண்டு 3,011 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 13 கிமீ தொலைவுக்கு புதிய தண்டவாளங்கள் அமைக்கப்பட்டிருப்பதுடன் 49 கிமீ தொலைவுள்ள ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டதன் மூலம் கேரளாவில் உள்ள ரயில் பாதைகள் 100% மின்மயமாக்கப்பட்டுள்ளன.
கேரளாவில் 2014 முதல் 106 ரயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டிருப்பதுடன், திருவனந்தபுரம், எர்ணாகுளம், கொல்லம், குருவாயூர், திருச்சூர், புனலூர், சாலக்குடி, கோழிக்கோடு, ஆலப்புழா உள்ளிட்ட 35 ரயில் நிலையங்கள் அமிர்த ரயில் நிலையங்களாக மேம்படுத்தப்படும்” என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
விமர்சனம் ஏன்? - முன்னதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த முழு பட்ஜெட் உரையில், “ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ், தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக விசாகப்பட்டினம் - சென்னை தொழில் துறை வழித்தடத்தில் உள்ள கொப்பர்த்தி முனையம் மற்றும் ஹைதராபாத் - பெங்களூரு தொழில்துறை வழித்தடத்தில் உள்ள ஓர்வக்கல் முனையத்தில் தண்ணீர், மின்சாரம், ரயில்வே, சாலை உள்ளிட்ட அத்தியாவசிய உள்கட்டமைப்புகளுக்கு நிதி வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
2024-25 மத்திய முழு பட்ஜெட் உரையில் ரயில்வே தொடர்பான ஒரே அறிவிப்பு இதுவாக மட்டுமே இருந்தது. ரயில்வே அமைச்சகம் இம்மாத இறுதிக்குள் அதன் நெட்வொர்க்கை 100 சதவீதம் மின்மயமாக்குவதையும், குறைந்தபட்சம் 2,000 கி.மீ. புதிய பாதைகள் அமைப்பதையும் இலக்காக கொண்டுள்ளது. அத்துடன் புதிய வந்தே பாரத் ரயில்களையும், விபத்துகளை தடுக்க கவாச் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட திட்டங்களுக்கு மேலும் தாரளமான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரே ஒரு திட்டத்துக்கான அறிவிப்பு மட்டும் வெளியானது அந்த துறைக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.
இதையடுத்து, ரயில் விகாஸ் நிகாம், ரயில் டெல் கார்ப்பரேஷன் தலா 6 சதவீதமும், இந்தியன் ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன் 5 சதவீதமும், இர்கான் இண்டர்நேஷனல் 9 சதவீதமும், என்பிசிசி பங்கின் விலை 4 சதவீதமும் வீழ்ச்சியடைந்தன. இந்தப் பின்னணியில் ரயில்வே அமைச்சர் மேற்கண்ட விளக்கத்தை அளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT