Published : 24 Jul 2024 07:21 PM
Last Updated : 24 Jul 2024 07:21 PM
புதுடெல்லி: மத்திய அரசுத் துறைகள் தொடர்பாக பிரதமர் அலுவலகத்தின் (பிஎம்ஓ) பொது குறை தீர்வு தளம் (போர்ட்டல்) மூலமாக பெறப்பட்டவற்றில் 12,000 புகார்கள் நிலுவையில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய பணியாளர்கள் துறை இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் எழுத்துபூர்வமாக அளித்த பதிலின் விவரம்: https://www.pmindia.gov.in என்பது மத்திய அமைச்சகம் அல்லது துறைகள் மற்றும் மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்கள் தொடர்புடைய பொதுவான குறைகளைப் பதிவு செய்வதற்கான ஒரு பொதுவான போர்ட்டலாகும். இந்தப் போர்ட்டல் மூலம் குறைகளை பதிவு செய்யும்போது பெறப்படும் ஐடி (அடையாள எண்) மூலம் பதிவு செய்யப்பட்ட புகார்களின் அப்போதைய நிலை என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.
இதன்மூலம் பெறப்பட்ட புகார்கள் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், துறைகள், அரசு மற்றும் யூனியன் பிரதேசங்களால் பரவலாக்கப்பட்ட முறையில் தீர்க்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பகிர்ந்த தகவலின்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையில் 58,612 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றுடன் முந்தைய ஆண்டில் நிலுவையில் இருந்த 34,659 புகார்களும் இணைத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில் 80,513 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. 12,758 புகார்கள் நிலுவையில் உள்ளன.
கடந்த 2023-ம் ஆண்டு 1,84,227 புகார்கள் பெறப்பட்டன (இவற்றில் முந்தைய ஆண்டில் இருந்து பெறப்பட்ட 19,705 புகார்களும் அடங்கும்). இவற்றில் 1,69,273 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டன. 34,659 புகார்கள் நிலுவையில் இருந்தன.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தொடர்பான நிலுவையில் உள்ள புகார்கள் குறித்த தகவல்களையும் அமைச்சர் பகிர்ந்து கொண்டார். அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்கள் தொடர்பாக 46,696 புகார்கள் பெறப்பட்டன. (இவற்றில் சென்ற ஆண்டு நிலுவையில் உள்ள 25,724 புகார்கள் இணைக்கப்பட்டவில்லை). மொத்த புகார்களில் 46,219 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. 26,201 புகார்கள் நிலுவையில் உள்ளன.
கடந்த 2023-ம் ஆண்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 91,973 புகார்கள் பெறப்பட்டன. முந்தைய ஆண்டு நிலுவையில் இருந்த 1,92,384 புகார்கள் சேர்ந்து மொத்தம் 2,58,633 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. 25,724 புகார்கள் நிலுவையில் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT