Published : 24 Jul 2024 04:24 PM
Last Updated : 24 Jul 2024 04:24 PM
புதுடெல்லி: அதிகரித்து வரும் பணவீக்கத்தை சமாளிக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று பட்ஜெட் மீதான விவாதத்தில் மாநிலங்களவையில் பேசிய முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று (ஜூலை 23) தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்த விவாதம் மாநிலங்களவையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. அப்போது பேசிய ப.சிதம்பரம், "நிதி அமைச்சருக்கு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை படிக்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது. அதற்காக மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட வேலைவாய்ப்புடன் ஊக்கத் தொகையை இணைக்கும் திட்டம் உள்பட பல யோசனைகளை நிதி அமைச்சர் எடுத்துக் கொண்டுள்ளார்.
எங்கள் தேர்தல் அறிக்கையின் பக்கம் 11, 30 மற்றும் 31-ல் இருந்து நல்ல யோசனைகளை அவர் தேர்ந்தெடுத்துள்ளார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைப் படித்து மேலும் பல நல்ல யோசனைகளைப் பரிந்துரைக்குமாறு நிதி அமைச்சக உயரதிகாரிகளைக் கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில், நகலெடுப்பது தடை செய்யப்படவில்லை.
பணவீக்கம் அதிகரித்து வருகிறது. அதை சமாளிக்க அரசு தரப்பில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பட்ஜெட்டில் பெரும்பாலான மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. பிஹாருக்கும், தமிழ்நாட்டுக்கும் ஏன் பேரிடர் நிவாரண நிதி கிடைக்கவில்லை? இந்தியா ஒரு கூட்டாட்சி மாநிலம் என்பதை நிதி அமைச்சருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
'எந்த ஒரு வேலையாக இருந்தாலும் அதற்கு நாளொன்றுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.400 என வரையறுக்க வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். மார்ச் 2024 வரை வழங்கப்பட்ட கல்விக் கடன்களின் வட்டி/தவணையின் செலுத்தப்படாத நிலுவைத் தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும். அக்னிபாத் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும். நீட் தேர்வை தொடர விரும்பாத மாநிலங்களுக்கு அந்த தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்' ஆகிய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்களை நிதி அமைச்சர் நகலெடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT