Published : 24 Jul 2024 03:50 PM
Last Updated : 24 Jul 2024 03:50 PM
புதுடெல்லி: வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களுக்கும், வேலை வாய்ப்பை தேடுபவர்களுக்கும் நிதியமைச்சகம் ஒரு உத்வேகத்தை அளித்துள்ளது என்று பட்ஜெட் குறித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி கருத்து தெரிவித்துள்ளார்.
மக்களவையில் நேற்று (ஜூலை 23) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதற்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினரிடமிருந்து கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
இதனிடையே மத்திய பட்ஜெட்டை கண்டித்து இண்டியா கூட்டணி கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, “போராட்டம் நடத்துவது எதிர்க்கட்சியினரின் கடமை என்றால், அவர்கள் இதை முன்னெடுக்கட்டும். இது ஒட்டுமொத்த நாட்டுக்குமான பட்ஜெட். நடுத்தர வர்க்கத்தினரை அரவணைத்துச் செல்வதுதான் தற்போதைய தேவை.
மேலும் இந்த பட்ஜெட்டின் மூலம் நிதியமைச்சகம் வேலைவாய்ப்பை உருவாக்குபவர்களுக்கும், வேலை வாய்ப்பை தேடுபவர்களுக்கும் ஒரு உத்வேகத்தை அளித்துள்ளது. இந்தப் பட்ஜெட்டை எதிர்க்கட்சியினர் அரசியல் பார்வையில் இல்லாமல், பொதுமக்களின் பார்வையில் அணுக வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மாநிலங்களவையில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை எனக் கூறி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். நான் மகாராஷ்டிராவைக் குறிப்பிடவில்லை. ஆனால், அந்த மாநிலத்தின் ரூ.76,000 கோடி மதிப்பிலான துறைமுக திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளோம். பெயர் குறிப்பிடாததால் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூற முடியாது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT