Published : 24 Jul 2024 12:54 PM
Last Updated : 24 Jul 2024 12:54 PM
புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு இடையே பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகக் கூறி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டன.
மக்களவையில் நேற்று (ஜூலை 23) நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதையடுத்து, பட்ஜெட் குறித்த விவாதத்துக்காக இன்று காலை நாடாளுமன்றம் கூடியது. முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் கூடிய இண்டியா கூட்டணி எம்பிக்கள், மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக எம்பிக்கள் கனிமொழி, திருச்சி சிவா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பட்ஜெட்டுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இந்த பட்ஜெட் பாஜகவின் கூட்டாளிகளை திருப்திப்படுத்துவதற்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்கள்(பாஜக) யாருக்கும் எதுவும் கொடுக்கவில்லை. இது பாரபட்சமான பட்ஜெட். இந்த பட்ஜெட்டை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம்” எனக் குறிப்பிட்டார்.
சமாஜ்வாதி கட்சி எம்.பி அகிலேஷ் யாதவ், “விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்க வேண்டும் என்று நாங்கள் அனைவரும் கோரியிருந்தோம். ஆனால் விவசாயிகளை விட தங்கள் அரசாங்கத்தை காப்பாற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவு விலை கொடுக்கப்பட்டுள்ளது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இந்த பட்ஜெட்டில் உத்தரப்பிரதேசத்துக்கு எதுவும் இல்லை. உத்தரப்பிரதேசத்தில் இரட்டை என்ஜின் அரசு இருப்பதால், இரட்டைப் பலன் கிடைத்திருக்க வேண்டும். லக்னோ மக்கள் டெல்லி மக்கள் மீது (ஆட்சியாளர்கள் மீது) கோபத்தில் இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். இரட்டை என்ஜின் அரசால் என்ன பலன்?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மத்திய பட்ஜெட் குறித்து பேசிய காங்கிரஸ் எம்பி சசி தரூர், “பெரும்பாலான மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு மிகக் குறைவு. குறிப்பாக கேரளாவுக்கு குறைவாகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கேரளாவின் சுகாதாரத் துறை மேம்பாட்டுக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், எதுவும் நிறைவேற்றப்படவில்லை. ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சொந்த பிரச்சினை உள்ளது” என தெரிவித்தார்.
முன்னதாக, பட்ஜெட் விஷயத்தில் எத்தகைய வியூகம் வகுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் ராஜாஜி மார்க் இல்லத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில், காங்கிரஸ் எம்.பி.க்கள் ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா எம்.பி.க்கள் சஞ்சய் ராவத், அரவிந்த் சாவந்த், திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்பி மஹுவா மாஜி, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி, ஆம் ஆத்மி எம்பிக்கள் சஞ்சய் சிங், ராகவ் சாதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாஜகவின் இரண்டு முக்கிய கூட்டாளிகள் ஆளும் மாநிலங்களான பிஹார் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு ஆதரவாக பட்ஜெட் இருப்பதாக பல எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்தனர். ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகர் அமராவதியின் வளர்ச்சிக்கு நிதியமைச்சர் ரூ.15,000 கோடி ஒதுக்கி இருந்தார். இதேபோல், பிஹாரில் பல்வேறு சாலை இணைப்புத் திட்டங்களுக்காக ரூ.26,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT