Last Updated : 24 Jul, 2024 09:17 AM

1  

Published : 24 Jul 2024 09:17 AM
Last Updated : 24 Jul 2024 09:17 AM

கொடுத்த வாக்குறுதிகளை பிரதமர் நிறைவேற்ற வேண்டும்: டெல்லி மாநாட்டில் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு லாபகரமான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம்,எம் எஸ் சாமிநாதன் குழு பரிந்துரையை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என ஐக்கிய விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.

டெல்லியில் கான்ஸ்டிட்யூஷன் கிளப்பில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கம் (அரசியல் சார்பற்றது) மாநாட்டில் கலந்துகொண்ட தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் பி ஆர்.பாண்டியன் இவ்வாறு கூறினார்.

மாநாட்டில் அவர் பேசியதாவது: இந்தியாவில் மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்தை நடத்தி வரும் போராளிகள் மற்றும் அதற்குத் துணை நிற்கும் விவசாயிகள் சங்க அமைப்புகளுக்கு வாழ்த்துகளையும், வீரமரணமடைந்த விவசாயிகளுக்கும் வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் முதல் வெற்றி கண்டுள்ளோம். விரைவில் போராட்டத்தின் நோக்கம் முழு வெற்றி பெறும் என நம்புகிறோம். இந்தியா முழுமையிலும் இருந்து பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் இங்கே கூடியிருப்பது நம்பிக்கை அளிக்கிறது.

பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர தமிழ்நாடு விவசாயிகள் சார்பில் வலியுறுத்துகிறேன். குறிப்பாக வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு லாபகரமான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம்,எம் எஸ் சாமிநாதன் குழு பரிந்துரையை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

வேளாண்மைக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் அடிப்படை நோக்கம் கொண்ட மின்சார ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். போராட்டக் களத்தில் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்.

பாஜக தனித்து ஆட்சி அமைக்கும் தகுதியை இழந்துள்ள நிலையில் விவசாயிகள் விரோத ஆட்சிக் கொள்கையை மோடி கைவிடுவார் என எதிர்பார்க்கிறோம். பாஜக ஆட்சியில் பங்கேற்கும் தெலுங்கு தேசம், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு முன்வருவார்கள் என நம்புகிறோம்.

நம் அமைப்பு எடுக்கும் போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் முழுமையாக ஆதரவளித்து பங்கேற்போம் என உறுதி அளிக்கிறோம். கடந்த ரயில் மறியல் போராட்டத்தில் தமிழ்நாட்டில் 32 ரயில் நிலையங்களில் போராட்டத்தை தீவிரமாக நடத்தி உள்ளோம்.

குமரி முதல் காஷ்மீர் வரையிலும் விவசாயிகள் ஒன்றுபட்டு உள்ளதை போராட்டம் உறுதிப்படுத்தியதை நினைவு படுத்த விரும்புகிறேன். புதுச்சேரி உட்பட தமிழ்நாட்டில் 40 நாடாளுமன்ற தொகுதியிலும் பாஜக கூட்டணியை விவசாயிகள் தோற்கடித்துள்ளனர்.

எனவே, விவசாயிகள் ஒன்றுபட்டால் தான் உண்டு வாழ்வு என்கிற நிலையில் நம்முடைய வாழ்க்கையை உறுதியாக்கிட ஒன்றுபட்டு செயல்படுவோம் என இம்மாநாடு அறைகூவல் விடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து குடவாசல் சரவணன், அவினாசி இராஜகோபால் உள்ளிட் 16 விவசாயப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x