Published : 24 Jul 2024 05:06 AM
Last Updated : 24 Jul 2024 05:06 AM

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நகலெடுத்துள்ளது மத்திய அரசு: மத்திய பட்ஜெட் குறித்து ப.சிதம்பரம் கருத்து

புதுடெல்லி: காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நகலெடுத்தது போல் அமைந்துள்ளது மத்திய பட்ஜெட் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

2024-25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இந்த மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறி இருப்பதாவது:

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு 2024-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் படித்து இருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ள பல திட்டங்களை மத்திய பட்ஜெட்டில் அறிமுகம் செய்துள்ளனர்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் பக்கம் 30-ல் குறிப்பிடப்பட்டுள்ள வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை கிட்டத்தட்ட மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது.

அதேபோல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் பக்கம் 11-ல் இடம்பெற்றுள்ள பயிற்சி திட்டத்தையும் மத்திய அரசு பட்ஜெட்டில் அறிமுகம் செய்துள்ளது.

ஏஞ்சல் வரியை ஒழிக்க பல ஆண்டுகளாக காங்கிரஸ் கெஞ்சி வந்தது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்த ஏஞ்சல் வரி ஒழிக்கப்படும் என்று தேர்தல் அறிக்கை பக்கம் 31-ல் குறிப்பிட்டிருந்தோம். இப்போது ஏஞ்சல் வரியை மத்திய அரசு ரத்து செய்வதாக அறிவித்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ள வேறு சில திட்டங்களையும் மத்திய நிதியமைச்சர் பயன்படுத்தியிருந்தால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருப்பேன். அவர் தவறவிட்ட சில வாய்ப்புகளை விரைவில் பட்டியலிடுவேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பதிவில் கூறும்போது, “2024 தேர்தலின்போது நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கையை நாங்கள் வெளியிட்டோம். அதில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புப் பயிற்சி பற்றி குறிப்பிட்டிருந்தோம். அதைத்தான் தற்போது பட்ஜெட்டில் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள திட்டத்தைத் திருடி மத்திய அரசு பட்ஜெட்டாக வெளியிட்டுள்ளது. இதில் வேறு எதுவும் புதிதாக இல்லை” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x