Published : 23 Jul 2024 10:29 PM
Last Updated : 23 Jul 2024 10:29 PM
புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகளால் இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும் என்று எஸ்பிஐ தலைவர் தினேஷ் குமார் காரா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர் கூறியிருப்பதாவது: “பிரதமரின் வீடு கட்டும் திட்டம் குறித்து பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகளின் மூலம் வங்கிகள் பலனடையும். அனைத்தையும் உள்ளடக்கிய இந்த பட்ஜெட் கிராமப் புறங்களின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்துகிறது.
அத்துடன் வேலைவாய்ப்பு, சுற்றுலா, திறன் மேம்பாடு உள்ளிட்ட அம்சங்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இது இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன். நிதிப்பற்றாக்குறை 4.9 சதவீதமாகக் குறைந்திருப்பது பொருளாதாரத்துக்கு மிகவும் நல்லது.
வேளாண் துறையை பொறுத்தவரை, நில ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குவதில் கவனம் செலுத்துவது, கடந்த காலத்தை விட விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டுகளை பெறுவதை மிகவும் எளிதாக்கும்” இவ்வாறு தினேஷ் குமார் காரா தெரிவித்துள்ளார்.
2024-25-க்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று காலை தாக்கல் செய்திருந்தார். இதில் புற்றுநோய் சிகிச்சைக்கான 3 மருந்துகளுக்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு, மொபைல் போன் மற்றும் சார்ஜர்களுக்கான சுங்கவரி 15 சதவீதமாக குறைப்பு, தங்கம் மற்றும் வெள்ளி மீதான அடிப்படை சுங்க வரி 6 சதவீதமாக குறைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. மேலும் வாசிக்க > வரிச் சலுகைகள் முதல் ஆந்திரா, பிஹாருக்கு ‘நிதி’ வரை: மத்திய பட்ஜெட் 2024-ன் கவனம் ஈர்த்த அம்சங்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT