Published : 23 Jul 2024 06:01 PM
Last Updated : 23 Jul 2024 06:01 PM
புதுடெல்லி: இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி 40-க்கும் மேற்பட்டோர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு தொடுத்தவர்களில் சிலர் இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி இருந்தனர். வேறு சிலர், தேர்வை ரத்து செய்யக்கூடாது; மறு தேர்வு நடத்த தேசிய தேர்வு முகமைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி இருந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இன்று தனது தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பு விவரம்: இந்த வழக்கில் வாதங்கள் முடிவடைந்தன. தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு 20 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை தொடர்பானது என்பதால், இதில் உறுதியான மற்றும் இறுதி முடிவை வழங்குவதற்கான அவசரத் தேவை உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, நீதிமன்றத்தின் இறுதி முடிவுகள் தற்போதைய கட்டத்தில் பதிவு செய்யப்படுகின்றன.
நீதிமன்றம் எடுத்துள்ள இந்த முடிவுக்கு சில காரணங்கள் உள்ளன. நீட் இளநிலை தேர்வு வினாத்தாள்கள் ஹசாரிபாக் மற்றும் பாட்னாவில் கசிந்துள்ளன. இதில் எந்த சந்தேகமும் இல்லை. இது தொடர்பாக சிபிஐ நடத்திய விசாரணையில் வினாத்தாள் கசிவால் 155 மாணவர்கள் பலனடைந்துள்ளதாக அது அறிக்கை தாக்கல் செய்துள்ளது. எனினும், விசாரணை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் சிபிஐ கூறி இருக்கிறது.
நீட் வினாத்தாள் பரவலாக கசியவில்லை என்ற சென்னை ஐஐடி-ன் அறிக்கையை அரசு தாக்கல் செய்துள்ளது. தேசிய தேர்வு முகமை வழங்கிய தரவுகளை நீதிமன்றம் சுயமாக ஆய்வு செய்துள்ளது. பதிவேட்டில் உள்ள தகவல்களின் அடிப்படையில், தற்போதைய நிலையில், தேர்வின் முடிவு மோசமாக உள்ளது மற்றும் தேர்வின் புனிதத்தன்மைக்கு திட்டமிட்ட ரீதியில் மீறல் நடந்துள்ளது என்பதைக் காட்டுவதற்கான அறிகுறிகள் இல்லை.
மறு தேர்வு நடத்த உத்தரவிட்டால் அது 23 லட்சம் மாணவர்களுக்கு தொடர் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும், மருத்துவப் படிப்புகளின் சேர்க்கை அட்டவணையில் சீர்குலைவை ஏற்படுத்தும் என்றும், எதிர்காலத்தில் தகுதி வாய்ந்த மருத்துவ நிபுணர்கள் கிடைப்பதில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அரசு கூறியது.
மேற்கண்ட காரணங்களுக்காக, இளநிலை நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்ய உத்தரவிடுவது, நியாயமாக இருக்காது என்று நாங்கள் கருதுகிறோம். இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் பின்னணி: நம்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்திவருகிறது.
அதன்படி நடப்பாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 571 நகரங்களில் 4,750 மையங்களில் கடந்த மே 5-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வெழுத மொத்தம் 24 லட்சத்து 6,079 பேர் மாணவ,மாணவிகள் விண்ணப்பித்தனர். அதில் 9 லட்சத்து 98,298 மாணவர்கள், 13 லட்சத்து 34,982 மாணவிகள், 17 திருநங்கைகள் என மொத்தம் 23 லட்சத்து 33,297 பேர் தேர்வை எழுதினர். அவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியானது.
தேர்வெழுதியதில் 5 லட்சத்து 47,036 மாணவர்கள், 7 லட்சத்து 69,222 மாணவிகள், 10 திருநங்கைகள் என மொத்தம் 13 லட்சத்து 16,268(56.41%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் இருந்து மட்டும் 89,426 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதனுடன், இந்த தேர்வில் இதுவரை இல்லாத அளவுக்கு 67 பேர் முழு மதிப்பெண் பெற்றிருந்தனர். அதில் தமிழகத்தை சேரந்த 8 பேர் உட்பட இடம் பெற்றிருந்தனர்.
இதுதவிர நேரக் குறைபாடு சிக்கல்களை முன்வைத்து 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்ணை என்டிஏ வழங்கியிருந்தது. இந்த கருணை மதிப்பெண் வழங்கிய விவகாரம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இதுதொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணையில் 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டு, அந்த தேர்வர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும் என்று என்டிஏ தெரிவித்தது. அதன்படி நீட் மறுத்தேர்வு ஜூன் 23-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 813 பேர் மட்டுமே எழுதினர். அதன் முடிவுகள் ஜூன் 30-ம் தேதி வெளியிடப்பட்டன.
எனினும், வினாத்தாள் விற்பனை, ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி பெரும் சர்ச்சையானது.
இதை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டங்களை நடத்தினர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்தமனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீட் தகுதித் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த கோரியும், நீதிமன்ற கண்காணிப்பில் முழுமையான நேரடி விசாரணை நடத்தவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், மறு தேர்வுக்கு உத்தரவிட முடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.
அதேநேரம் நீட் தேர்வின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் விதமாக முடிவுகளை மாணவர்களின் அடையாளங்களை மறைத்து நகரங்கள் மற்றும் மையங்கள் வாரியாக வெளியிட வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒரு நகரத்தில் அல்லது தேர்வு மையத்தில் அதிகம்பேர் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனரா என்பதை கண்டறியும் வகையில் வெளிப்படையாக தேர்வு முடிவுகளை வெளியிட இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.
அதையேற்று நீட் தேர்வு முடிவுகளை நகரங்கள் மற்றும் தேர்வு மையங்கள் வாரியாக என்டிஏ ஜூலை 20-ம் தேதி வெளியிட்டது. அந்த விவரங்களை https://exams.nta.ac.in/NEET/ என்ற இணையதளத்தில் சென்று அறியலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000/ 69227700 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT