Published : 23 Jul 2024 03:56 PM
Last Updated : 23 Jul 2024 03:56 PM

“ஆட்சியை காப்பதற்கான அறிவிப்புகள்” - மத்திய பட்ஜெட் மீது இண்டியா கூட்டணி தலைவர்கள் விமர்சனம்

புதுடெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை செவ்வாய்க்கிழமை மக்களவையில் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து, “இது ஆட்சியைக் காப்பாற்றுவதற்கான பட்ஜெட்” என இண்டியா கூட்டணித் தலைவர்கள் கடுமையாக சாடியுள்ளனர்.

மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "பத்தாண்டு கால ஆட்சியின் மறுப்புக்கு பின்னர், உயிரியல் ரீதியாக பிறக்காத பிரதமரோ, அவரது கட்சியினரோ அவர்களுடைய தேர்தல் அறிக்கையில் வேலைவாய்ப்பின்மையை பற்றி குறிப்பிடாத நிலையில் இறுதியாக வேலைவாய்ப்பின்மை என்பது தேசிய நெருக்கடி என்பதை மத்திய அரசு மறைமுகமாக ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது" என்று தெரிவித்துள்ளார். பட்ஜெட் குறித்த தொடர்ச்சியான பதிவுகளில், "இது மிகவும் தாமதமானது, மிகவும் குறைவாகவே உள்ளது. பட்ஜெட் உரையில் செயல்களை விட தங்களை வெளிக்காட்டிக் கொள்வதிலேயே அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி.சசி தரூர் கூறுகையில், "பட்ஜெட்டில் பல விஷயங்கள் விடுபட்டுள்ளன. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. மக்கள் தொகையில் 40 சதவீதம் உள்ள வருமானத்தில் பின்தங்கியுள்ளவர்களின் வருமானத்தை உயர்த்துவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. இன்று நாட்டில் நிலவும் சமத்துவமின்மைக்கு தீர்வு காண்பது பற்றி குறைவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறும்போது, "மிகையாகவோ, குறைவாகவே மத்திய பட்ஜெட்டில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மறுபிரதி எடுக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமான விஷயம் யுவநிதி திட்டம். வேலைக்கான பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு ரூ.5000 திட்டத்தை இந்த அரசு அறிவித்துள்ளது. இது ராகுல் காந்தியின் சிந்தனையை மத்திய அரசு மறுபிரதி எடுத்திருப்பதையே காட்டுகிறது. ஆந்திராவுக்கான சிறப்பு அந்தஸ்து மறுக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆந்திர பிரதேசத்துக்கு லாலிபாப் கொடுத்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், "அவர்கள் அரசைக் காப்பாற்ற விரும்புகிறார்கள். ஆந்திராவுக்கும் பிஹாருக்கும் சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது நல்ல விஷயம். ஆனால், பிரதமர்களை வழங்கும் உத்தரப் பிரதேசத்தின் விவசாயிகளுக்கு பெரிய அறிவிப்புகள் ஏதாவது உள்ளதா? விவசாயிகளின் விளைபொருள்கள் மற்றும் வருமானங்களுக்கான திட்டங்கள் ஏதாவது பட்ஜெட்டில் உள்ளதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சமாஜ்வாதி கட்சி எம்.பி. டிம்பில் யாதவ் கூறுகையில், "இந்த அரசு திட்டங்களை வழங்குகிறது. ஆனால் தொடர்வதில்லை. பெண்களின் இன்றைய மிகப் பெரிய கவலை பாதுகாப்பு, இந்தப் பிரச்சினை குறித்து தீர்வு சொல்லப்படவில்லை. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்க இந்த அரசு விரும்பவில்லை. கிராமப்புறங்களின் வாங்கும் சக்தி தொடர்ந்து குறைந்து வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. கல்யாண் பானர்ஜி கூறுகையில், "ஆட்சியைக் காப்பாற்றுவதற்கான பட்ஜெட் இது" என்று சாடியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x