Published : 23 Jul 2024 02:04 PM
Last Updated : 23 Jul 2024 02:04 PM
புதுடெல்லி: அனைத்து முறையான துறைகளிலும் புதிதாக பணியில் சேரும் அனைத்து நபர்களுக்கும் ஒரு மாத ஊதியத்தை மத்திய அரசு வழங்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று (ஜூலை 23) காலை தாக்கல் செய்தார். அவர் தனது உரையில், “பிரதமரின் தொகுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக ‘வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை’ வழங்கும் 3 திட்டங்களை அரசு செயல்படுத்த உள்ளது. இந்த திட்டங்கள் இபிஎஃப்ஓவில் (EPFO) பதிவுசெய்தல், முதல் முறையாக பணியாளர்களை அங்கீகரிப்பதில் கவனம் செலுத்துதல், பணியாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கான ஆதரவை அளித்தல் என்ற அடிப்படையில் இருக்கும்.
முதல் திட்டம்: இத்திட்டம் அனைத்து முறையான துறைகளிலும் புதிதாக பணியில் சேரும் அனைத்து நபர்களுக்கும் ஒரு மாத ஊதியத்தை வழங்கும். இபிஎப்ஓவில் பதிவு செய்தபடி முதல் முறையாக பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளம் வழங்கப்படும். மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம் பெறுவர்கள் இத்திட்டத்தின் பயனாளிகளாக இருப்பார்கள். ஒரு மாத சம்பளம் 3 தவணைகளாக நேரடி பண பரிமாற்றமாக வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் 2.10 கோடி இளைஞர்கள் பயனடைவார்கள்.
இரண்டாவது திட்டம்: உற்பத்தித் துறையில் கூடுதல் வேலைவாய்ப்பை இந்தத் திட்டம் ஊக்குவிக்கும். வேலையின் முதல் 4 ஆண்டுகளில் அவர்களின் EPFO பங்களிப்பைப் பொறுத்து, பணியாளர் மற்றும் முதலாளி இருவருக்கும் நேரடியாக குறிப்பிட்ட அளவில் ஊக்கத்தொகை வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம், உற்பத்தித் துறைகளில் வேலைவாய்ப்பில் சேரும் 30 லட்சம் இளைஞர்கள் மற்றும் அவர்களின் முதலாளிகள் பயனடைவார்கள்.
மூன்றாவது திட்டம்: முதலாளிகளை மையமாகக் கொண்டது இந்தத் திட்டம். அனைத்துத் துறைகளிலும் கூடுதல் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது இது. மாதம் ரூ 1 லட்சம் சம்பளத்தில் உள்ள அனைத்து கூடுதல் வேலைகளும் கணக்கிடப்படும். ஒவ்வொரு கூடுதல் பணியாளருக்கும் அவர்களின் EPFO பங்களிப்புக்காக அரசு 2 ஆண்டுகளுக்கு ஒரு மாதத்திற்கு ரூ 3,000 வரை முதலாளிகளுக்கு திருப்பிச் செலுத்தும். இந்த திட்டம் 50 லட்சம் பேருக்கு கூடுதல் வேலைவாய்ப்பை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT