Published : 23 Jul 2024 01:55 PM
Last Updated : 23 Jul 2024 01:55 PM

மத்திய பட்ஜெட் 2024 எதிரொலி: தங்கம், வெள்ளி, செல்போன், காலணி விலை குறைகிறது!

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் 2024-2025-ல் தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதன் எதிரொலியாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 வரை குறையும் சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைப்பு அரசுக்கும், வியாபாரிகளுக்கும், சாமானிய மக்களுக்கும் நன்மை சேர்க்கும் அறிவிப்பு என்ற வரவேற்பையும் பெற்று வருகிறது.

நடப்பு 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் வரி குறைப்புகளை நிதியமைச்சர் அறிவித்தார். சில பொருட்களுக்கான வரி உயர்வையும் அறிவித்தார். அதன்படி விலை குறையும், விலை உயரும் பொருட்களின் பட்டியல் இதோ: தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி சுங்கவரியை 6 சதவீதமாகவும், ப்ளாட்டினத்துக்கான வரியை 6.4 சதவீதமாகவும் குறைத்து அறிவித்தார். இதன் மூலம் சமீபகாலமாக இறக்குமதி வரி விதிப்பும் தங்கம், வெள்ளி விலை ஏறுவதற்குக் காரணமாக இருப்பதாக அத்தொழில் துறையினர் கூறிவந்த நிலையில் தங்கம், வெள்ளி விலை கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • செல்போன்கள், செல்போன் சார்ஜர்கள், மொபைல் உதிரி பாகங்களுக்கான சுங்க வரி 15 சதவீதம் வரை குறைக்கப்படுகிறது. இதனால் செல்போன்கள் மற்றும் சார்ஜர்கள் விலை குறையும்.
  • * புற்றுநோய் சிகிச்சைக்கான மூன்று மருந்துகளுக்கு முற்றிலுமாக வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலை வெகுவாகக் குறைகிறது.
  • * கடல் உணவு: இறால், மீன் உணவுகள் உள்ளிட்ட சில கடல் உணவுகளின் மீதான அடிப்படை சுங்க வரி 5 சதவீதம் குறைக்கப்படுகிறது. இதன்மூலம் கடல் உணவுகளின் விலை குறையும். இந்த அறிவிப்பால் பங்குச்சந்தையில் கடல் உணவு உற்பத்தி, ஏற்றுமதி நிறுவனங்களின் பங்குகள் விற்பனை பங்குச்சந்தையில் உச்சம் கண்டன.
  • * சூரிய மின் உபகரண பாகங்கள்: சூரிய மின்சாரம் தொடர்பான உதிரிபாகங்கள் மீதான சுங்க வரியை கைவிடுவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சோலார் செல்கள், சோலார் பேனல்கள் மீதான மூலதனப் பொருட்களுக்கான வரி ரத்தாகிறது.
  • * காலணிகள்: தோல் மற்றும் காலணி தயாரிப்புகளுக்கு சுங்க வரி ரத்து செய்யப்படுகிறது. இதனால் காலணிகள் விலை குறையும்.

* முக்கியமான கனிமங்கள்: விண்வெளி, பாதுகாப்பு துறையில் இன்றியமையாத 25 முக்கியமான கனிமங்களுக்கு சுங்கவரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஃபெரோநிக்கல், ப்ளிஸ்டர் காப்பர், ஆகிய கனிமங்களுக்கு அடிப்படை சுங்க வரி ரத்து செய்யப்படுகிறது.

விலை அதிகரிப்பு: அமோனியம் நைட்ரேட் மீதான சுங்க வரியை 10 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அதிகரித்து நிதியமைச்சர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் அமோனியம் நைட்ரேட் சார்ந்த பொருட்கள் விலை உயரும். மக்காத ப்ளாஸ்டிக் மீதான வரியும் 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சில தொலைதொடர்பு உபகரணங்களில் அடிப்படை சுங்க வரி 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள குறிப்பிட்ட சில பொருட்களுக்கு 1 சதவீதம் டிசிஎஸ் விதிக்க அரசு முன்மொழிந்துள்ளது. வாசிக்க > மத்திய பட்ஜெட் 2024-25: முக்கிய அம்சங்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x