Published : 23 Jul 2024 01:06 PM Last Updated : 23 Jul 2024 01:06 PM
மத்திய பட்ஜெட் 2024-ல் பிஹார், ஆந்திராவுக்கு ‘சிறப்பு’ கவனிப்பு: அறிவிப்புகள் என்னென்ன?
புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில் பிஹார், ஆந்திர மாநிலங்களுக்கு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) 2024-25 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலுக்கு பிறகு புதிய அரசு அமைந்திருப்பதால் நடப்பு 2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக தாக்கல் செய்யும் 7-வது பட்ஜெட் ஆகும். மத்திய அமைச்சரவை ஒப்புதலுடன் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் ஆந்திரா மற்றும் பிஹாருக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்தார். மேலும், தனது பேச்சின்போது சந்திரபாபு நாயுடுவின் கனவுத் திட்டமான பொலாவரம் நீர்ப்பாசன திட்டத்துக்கு நிதி வழங்க மத்திய அரசு உறுதியாக கூறினார்.
பிஹாருக்கான சிறப்பு திட்டங்கள்: பாட்னா - பூர்னியா விரைவுச்சாலை பிஹார் சாலை திட்டங்களுக்காக ரூ.26,000 கோடி வழங்கப்படும்.
பிஹாரின் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள பிர்பைண்டியில் ரூ.21,400 கோடி செலவில் 2,400 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும்.
பிஹாரில் புதிய விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்பு அமைக்கப்படும்.
பக்சர் மாவட்டத்தில் ஓடும் கங்கை ஆற்றின் மீது இருவழிப் பாலம் அமைக்கப்படும்.
ரூ.11,500 கோடி நிதியுதவியுடன் வெள்ளக் கட்டுப்பாட்டுக் கட்டமைப்பு பிஹாரில் உருவாக்கம்.
மத்திய அரசின் ''பூர்வோதயா'' திட்டத்தில் பிஹார் இணைக்கப்படும்.
பிஹாரின் கயாவில் தொழில்முனையத்தை மேம்படுத்தும் வகையில் கயா முதல் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அம்ரிஸ்தரஸ் வரை பொருளாதார வளர்ச்சி திட்டம் கொண்டுவரப்படும்.
வங்கிகளின் வளர்ச்சிக்கான நிதியை விரைவாக வழங்க வேண்டும் என்ற பிஹார் அரசின் கோரிக்கை நிறைவேற்றப்படும்.
சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தும் பொருட்டு பிஹாரின் கயாவில் உள்ள விஷ்ணுபாத் கோயில் மற்றும் மஹாபோதி கோயில் மேம்பாட்டுக்கான திட்டங்களை மத்திய அரசு மேற்கொள்ளும்.
ஆந்திராவுக்கான சிறப்பு திட்டங்கள்: ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடி ஒதுக்கப்படுகிறது.
ஆந்திராவில் தலைநகர் நிறுவ நிதி சார்ந்து, ரூ. 5000 கோடி ஒதுக்கப்படும்.
பொலாவரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு நிதி வழங்க மத்திய அரசு உறுதி.
விசாகப்பட்டினம் - சென்னை தொழில்துறை வழித்தடத்துக்கு கூடுதல் ஒதுக்கீடுகள் அறிவிக்கப்படும்.
ஆந்திரப் பிரதேசத்தை உள்ளடக்கிய ஹைதராபாத் -பெங்களூரு தொழில்துறை வழித்தடம் புதிதாக நிறுவப்படும்.
ஆந்திர மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ், ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம், 2014ன் கீழ் ஆந்திராவுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற மத்திய அரசு உதவும்.
ஆந்திர வளர்ச்சித் திட்டங்களுக்கான மூலதனச் செலவினங்களுக்காக கூடுதல் ஒதுக்கீடு வழங்கப்படும்.
ஆந்திர மாநிலத்தின் மூன்று மாவட்டங்களுக்கு பின்தங்கிய பகுதிகளுக்கான நிதி வழங்கப்படும்.
ஆந்திர அரசு புதிய சாலைகள் மற்றும் நீர் குழாய்கள் அமைக்க நிதி உதவி கேட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு சம்மதம் தெரிவிக்கிறது. நிதி உதவிகள் ஆந்திர அரசுக்கு வழங்கப்படும்.
ஆந்திராவில் ரயில் இணைப்புகள் மேம்படுத்தப்படும்.
முக்கியத்துவம் ஏன்? - மக்களவை தேர்தலில் பெரும்பான்மை இல்லாத பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர, ஆந்திராவை சேர்ந்த தெலுங்கு தேசம் மற்றும் பிஹாரை சேர்ந்த ஜனதா தளம் கட்சிகள் கூட்டணியுடன் ஆட்சி அமைத்தது. இந்த இருகட்சிகளின் முக்கிய கோரிக்கையாக மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து இருந்த நிலையில், இதுவரை சிறப்பு அந்தஸ்து தரப்படவில்லை. இந்த நிலையில்தான் தற்போது பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பிஹாருக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. வாசிக்க > மத்திய பட்ஜெட் 2024-25: முக்கிய அம்சங்கள்
WRITE A COMMENT