Published : 23 Jul 2024 04:53 AM
Last Updated : 23 Jul 2024 04:53 AM

சிகிச்சையின்போது வயிற்றில் ஊசி வைத்து தைத்த வழக்கு: பாதிக்கப்பட்ட பெங்களூரு பெண்ணுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

மாதிரி படம்

பெங்களூரு: சிகிச்சையின்போது வயிற்றுக்குள்ஊசியை வைத்து தைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட பெண் ணுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் தற்போது உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு ஜெயாநகரில் குடியிருந்து வருபவர் பத்மாவதி. இவருக்கு 32 வயதாக இருக்கும்போது கடந்த 2004-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி தீபக் மருத்துவமனையில் குடலிறக்க (ஹர்னியா) அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த அறுவை சிகிச்சையின்போது இரண்டு மருத்துவர்கள் தவறுதலாக அவரது வயிற்றுக்குள் 3.2 சென்டிமீட்டர் அளவிலான ஊசியை வைத்து தைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால், பல ஆண்டுகளாக வயிறு மற்றும் முதுகு வலியால் அவதிப்பட்ட பத்மாவதிக்கு இரண்டு முறை தீபக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது.

இருப்பினும், உடல்நல பாதிப்புசரியாகாததால் கடந்த 2010-ல்மற்றொரு தனியார் மருத்துவமனையை பத்மாவதி அணுகினார். அங்கு ஸ்கேன் செய்து பார்த்த போதுதான் அவரது வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் 3.2 செ.மீ. நீளமுள்ள இரண்டு ஊசிகள் இருப்பது தெரியவந்தது. பின்னர் மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அந்த ஊசிகள் அகற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து அவர், நுகர்வோர் நீதிமன்றத்தை நாடி புகார் அளித்தார்.

கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகுநுகர்வோர் குறைதீர் ஆணையம்,மருத்துவர்களின் கவனக்குறைவால் கடுமையான வலி மற்றும்சிரமத்தை அனுபவித்த பத்மாவதிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.

அத்துடன் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் அறுவை சிகிச்சையின்போது தவறிழைத்த அந்த இரண்டு மருத்துவர்களும் வழக்கு செலவாக பத்மாவதிக்கு ரூ.50,000 வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x