Published : 23 Jul 2024 04:06 AM
Last Updated : 23 Jul 2024 04:06 AM

ஆர்எஸ்எஸ்-ல் அரசு ஊழியர்கள் சேர விதிக்கப்பட்ட தடை நீக்கம்: பாஜக வரவேற்பு; காங்கிரஸ் எதிர்ப்பு

கோப்புப் படம்

புதுடெல்லி: ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர அரசு ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு நீக்கி உள்ளது. இதை பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் வரவேற்றுள்ள நிலையில், காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்வு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் கடந்த 9-ம் தேதி பிறப்பித்த அலுவலக குறிப்பாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் இணைந்து செயல்பட தடை விதித்து 1966 நவம்பர் 30-ம் தேதி, 1970 ஜூலை 25-ம் தேதி, 1980 அக்டோபர் 28-ம் தேதி ஆகிய நாட்களில் அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசாணைகள் மறுபரிசீலனை செய்யப்பட்டன. இதன் அடிப்படையில், ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர அரசு ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 9-ம் தேதியே இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், இதுபற்றிய தகவல் இப்போதுதான் வெளிவந்துள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன. இதுகுறித்து அரசியல் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளதாவது:

பாஜக ஊடக பிரிவு தலைவர் அமித் மாளவியா: ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்க தடை விதித்து 58 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அரசியல் சாசனத்துக்கு எதிரான இந்த உத்தரவை பிரதமர் மோடி தலைமையிலான அரசு இப்போது திரும்பப் பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது. கடந்த 1966 நவம்பர் 7-ம் தேதி நாடாளுமன்றத்தில் பசுவதைக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு ஆர்எஸ்எஸ் மற்றும் ஜன சங்கம் ஆகியவை லட்சக்கணக்கானோரின் ஆதரவை திரட்டியது. இதில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர். இதையடுத்து, 1966 நவம்பர் 30-ம் தேதி அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர மத்திய அரசு முதல்முறையாக தடை விதித்தது.

ஜனநாயகம் வலுப்பெறும்: ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேத்கர்: மத்திய அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இது இந்தியாவின் ஜனநாயக நடைமுறையை வலுப்படுத்தும்.

ஆர்எஸ்எஸ் அமைப்பு நாட்டை கட்டமைப்பதில் கடந்த 99 ஆண்டுகளாக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அத்துடன் தேசிய பேரிடர் காலத்தில் சமுதாய சேவையிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பின் செயல்பாட்டை பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் பாராட்டி உள்ளனர். ஆனால், அரசியல் காரணங்களுக்காக முந்தைய ஆட்சியாளர்கள் இந்த அமைப்பில் சேரக் கூடாது என அரசு ஊழியர்களுக்கு தடை விதித்திருந்தனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்: மக்களவை தேர்தல் முடிவு வெளியான ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு, பிரதமர் மோடிக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவேதான் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதுகூட அமலில் இருந்த தடை இப்போது நீக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சமூக வலைதள பதிவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x