Published : 23 Jul 2024 05:29 AM
Last Updated : 23 Jul 2024 05:29 AM
புதுடெல்லி: பெரும்பாலான வட மாநிலங்களில் நீர்வளம், மனிதவளம் உள்ளிட்ட பல அடிப்படை வசதிகள் அதிக அளவில் உள்ளன. இருப்பினும், வட மாநிலங்களை விட தென் மாநிலங்களில் தொழில் மற்றும் வர்த்தகத்தின் நிலை சிறப்பாக இருப்பதாகக் கருதப்படுகிறது. இதன் காரணமாக, பாஜக ஆளும் மாநில அரசுகள், தமிழ்நாட்டை சேர்ந்த தொழில் முதலீட்டாளர்களை தங்கள் மாநிலங்களில் தொழில் தொடங்க வைக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த ஆண்டு ஜனவரியில் உத்தரப் பிரதேச (உ.பி.) அரசு, தங்கள் மாநிலத்தில் தொழில் தொடங்க தமிழ்நாட்டு தொழில் துறையினருக்கு அழைப்பு விடுத்தது. இதற்காக, இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பு (பிக்கி), உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநாட்டை சென்னையில் நடத்தியது.
அதன் தொடர்ச்சியாக, பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான மத்திய பிரதேசத்தின் சார்பிலும் முதலீட்டாளர்களை ஈர்க்கும் பணி தற்போது துவங்கி உள்ளது. தமிழ்நாட்டின் தொழில் முனைவோர் மற்றும் வர்த்தகர்களை ம.பி. முதல்வர் டாக்டர் மோகன் யாதவ் கோவையில் சந்தித்துப் பேச உள்ளார். தனியார் நிறுவனம் மூலமாக நடைபெறும் இந்த நேரடி சந்திப்பு, கோவை லீ மெரிடியன் ஓட்டலில் வரும் ஜுலை 25 காலை 10.30 மணி முதல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழ்நாட்டின் தொழிலதிபர்கள், தொழில்முனைவோர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு ம.பி. அரசின் தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (எம்பிஐடிசி) அழைப்புவிடுத்துள்ளது.
இதற்கான உதவிகளை ம.பி. அரசுக்கு இந்திய தொழிலக கூட்டமைப்பு வழங்கி வருகிறது. இந்த கலந்துரையாடலில் பங்குபெற விரும்புவோர் எம்பிஐடிசி இணையத்தில் தங்கள் பெயர் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். இக்கூட்டத்தை ஒருங்கிணைப்பதில் எம்பிஐடிசியின் முன்னாள் இணைச் செயலாளரும், மெட்ரோ திட்டநிர்வாக இயக்குநருமான சிபி சக்ரவர்த்தி முக்கிய பங்காற்றி வருகிறார். 2008-ம் ஆண்டு ம.பி. மாநில பிரிவின் ஐஏஎஸ் அதிகாரியான சிபி சக்கரவர்த்தி, ஈரோட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் சிபிசக்ரவர்த்தி கூறும்போது, ‘‘தமிழ்நாட்டின் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வகை தொழில்களையும் தங்கள் மாநிலத்தில் விரிவுபடுத்த ம.பி.அரசு விரும்புகிறது. கோவையில்நடைபெறவுள்ள கலந்துரையாடலின்போது ம.பி. அரசின் பல்வேறு வகை மானியங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து எடுத்துரைப்போம். தமிழ்நாட்டு தொழில்துறையினர் ம.பி.யில் தொழில்தொடங்க அனைத்து வசதிகளையும் செய்து தர தயாராக உள்ளோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT