Published : 23 Jul 2024 05:35 AM
Last Updated : 23 Jul 2024 05:35 AM

மாற்றுத் திறனாளிகள் பற்றி சர்ச்சை கருத்து: பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு கண்டனம்

ஸ்மிதா சபர்வால்

ஹைதராபாத்: தெலங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்றதும், முதன்முதலில் மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு அரசு பணிக்கான ஆணையை வழங்கினார். இந்த புகைப்படம் வைரலாக பரவியது. முதல்வருக்கு நல்ல பெயரையும் பெற்றுக் கொடுத்தது.

இந்த சூழலில் தெலங்கானா ஐஏஎஸ் அதிகாரியான ஸ்மிதா சபர்வால், மாற்றுத் திறனாளிகள் குறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

ஏஐஎஸ் எனப்படும் அகில இந்திய சர்வீஸ்களான ஐபிஎஸ், ஐஏஎஸ், ஐஎஃப்எஸ் பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு எதற்கு? ஐஏஎஸ் என்றால் மக்களின் குறைகளை நேரில் சென்று ஆய்வு செய்ய நேரிடும். இது நீண்ட கால பணி. இதற்கு உடலும் ஒத்துழைக்க வேண்டும். விமானப் படையிலோ அல்லது ராணுவத்திலோ மாற்றுத் திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு இல்லை. அதுபோல்தான் ஐஏஎஸ் பணியையும் கருத வேண்டும் என சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டிருந்தார்.

அவருக்கு எதிராக மாற்றுத் திறனாளிகள் நல சங்கத்தினர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். ஸ்மிதா சபர்வாலின் கருத்து எங்களை அவமானத்துக்கு உள்ளாக்கி உள்ளது. இதற்காக அவர் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் நல சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர். மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பலரும், ஸ்மிதாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர். நாடு முழுவதும் சமூக ஆர்வலர்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x