Published : 22 Jul 2024 11:08 PM
Last Updated : 22 Jul 2024 11:08 PM

நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரி தீர்மானம்: கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!

பெங்களூரு: நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரி கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வர அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை இன்று (ஜூலை 22) கூடியது. இந்த அமைச்சரவையில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. நீட் தேர்வுக்கு எதிரான இந்த மசோதாவில், நீட் தேர்வுக்கு பதில் பொது நுழைவுத் தேர்வின் (CET) அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டால் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை கர்நாடக அரசே நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த மாதம் நீட் தேர்வை தேசிய அளவில் முற்றிலுமாக அகற்ற வேண்டும், நீட்விலக்கு கோரிய தமிழக அரசின் மசோதாவுக்கு மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

இதே போல நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலை குழுவின் பரிந்துரைப்படி, கடந்த 2021 செப்.13-ம் தேதி சட்டப்பேரவையில் ‘தமிழ்நாடு மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம்’ என்ற மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால், நீண்டநாளாக ஆளுநரால் ஒப்புதல் தரப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டது.

அதன் பிறகு, 2022 பிப்.5-ம்தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டு, அந்த சட்ட மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிப்.8-ம் தேதி சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு மீண்டும் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு ஆளுநரால் அனுப்பப்பட்டது. ஆனால், ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.

கடந்த மே 5-ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின்போது வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x