Published : 22 Jul 2024 07:55 PM
Last Updated : 22 Jul 2024 07:55 PM
திருவனந்தபுரம்: கேரளாவில் 14 வயது சிறுவன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவருடன் தொடர்பில் இருந்த 6 பேர் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், அவர்களுக்கு நிபா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அந்தப் பரிசோதனை முடிவுக்காக அம்மாநில அரசு காத்திருக்கிறது.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் பாண்டிக்கோடு பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுவன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கேரளாவில் மேலும் சிலருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், கேரளா எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களைச் சேர்ந்த சிலருக்கு நிபா நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. ஜூலை 11 முதல் 15 வரை அச்சிறுவன் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது.
சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் இதுகுறித்து கூறும்போது, “நிபா வைரஸால் இறந்த சிறுவனுடன் தொடர்பில் இருந்த 350 பேரின் தொடர்பு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது, அந்த தொடர்புப் பட்டியலில், பிற மாவட்டங்களைச் சேர்ந்த 6 பேர் உள்ளதாக தெரிகிறது. 101 பேருக்கு ஆபத்து இருப்பதாக தெரிகிறது. சிறுவனுடன் தொடர்பில் இருந்த 68 சுகாதாரப் பணியாளர்களும் இதில் அடங்குவர். நோய்வாய்ப்பட்ட பின்னர் அச்சிறுவன் பயணித்த தனியார் பேருந்தும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சிறுவனுடன் தொடர்பில் இருந்த 6 பேர் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், அவர்களுக்கு நிபா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அந்தப் பரிசோதனை முடிவுக்காக அரசு காத்திருக்கிறது. இறந்த சிறுவனின் பெற்றோருக்கு அறிகுறிகள் இல்லை என்றாலும், நாங்கள் அவர்களின் மாதிரிகளையும் சோதனைக்கு அனுப்பியுள்ளோம். மொத்தம் 13 மாதிரிகள் இன்று சோதனைக்கு அனுப்பப்படும். மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம்” என்றார்.
நோய்த் தொற்றுக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வவ்வால்களின் எண்ணிக்கையை ஆய்வு செய்வதற்காக தேசிய வைராலஜி நிறுவனத்தின் குழு ஒன்று வரவுள்ளது. முன்னெச்சரிக்கையாக, பாதிக்கப்பட்ட மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் 4 ஆலோசனைகள்: நிபா வைரஸ் பரவலை தடுக்க உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கேரள அரசுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் 4 ஆலோசனைகளை வழங்கி உள்ளது. அதன்படி, நிபா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவரின் குடும்ப உறுப்பினர்கள், அருகில் வசிப்பவர்கள் யாருக்காவது பாதிப்பு இருக்கிறதாஎன கண்டறிய வேண்டும். பாதிக்கப்பட்ட நபர் கடந்த 12 நாட்களில் யார் யாருடன் தொடர்பில் இருந்தார் என்பதை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும்.
நிபா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறி உள்ளவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப வேண்டும். நிபா வைரஸ் பரவலைத் தடுக்கும் கேரள அரசின் முயற்சிக்கு உதவும் வகையில், மத்திய சுகாதார அமைச்சகத்தின் நேஷனல் ஒன் ஹெல்த் மிஷன் அமைப்பைச் சேர்ந்த ஒரு குழு அனுப்பி வைக்கப்படும்.
கேரள அரசின் கோரிக்கையை ஏற்று, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மோனோக்ளோனல் ஆன்டிபாடிஸை அனுப்பிவைத்துள்ளது. நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதிப்பதற்காக நடமாடும் பயோசேப்டி லெவல்-3 ஆய்வகம் கோழிக்கோடு நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உஷார் நிலை: கேரள எல்லைப் பகுதியில் தமிழக சுகாதாரத் துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. அத்துடன், முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
அறிகுறிகள்: தலைவலி, மயக்கம், சுவாசப் பிரச்சினை, மனநலப் பிரச்சினை போன்றவை நிபா வைரஸின் முக்கிய அறிகுறிகளாகும். அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் அவரது தொடர்பில் இருப்பவர்களை 21 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். அறிகுறிகள் கண்டறியப்பட்ட நோயாளிகள் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும். காய்கள் மற்றும் பழங்களை நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும்.
கிணறுகள், குகைப்பகுதிகள், தோட்டங் கள், இருள் சூழ்ந்த பகுதிகளுக்கு செல்வதைபொதுமக்கள் தவிர்க்க வேண்டும். நோயாளிகளை பரிசோதனை செய்யும் சுகாதாரத்துறை அலுவலர்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொள்ள வேண்டும். ரத்தம், தொண்டை சளி மற்றும் சிறுநீர் மாதிரிகளை பரிசோதனை செய்ய வேண்டும். நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்படும் மாதிரிகளை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பாதுகாத்து 48 மணி நேரத்துக்குள் ஆய்வகத்துக்கு அனுப்ப வேண்டும். பரிசோதனையின் முடிவுகளை சுகாதாரத்துறைக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.
நிபா வைரஸ் பின்புலம்: கடந்த 1998-ம் ஆண்டில் மலேசியாவில் முதல்முறையாக நிபா வைரஸ் கண்டறியப்பட்டது. இது பெரும்பாலும் பழந்தின்னி வவ்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. நாய், பூனை, ஆடு, மாடு, குதிரை உள்ளிட்ட விலங்குகளிடம் இருந்தும் மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவுகிறது. கடந்த 2018-ல் கேரளாவின் கோழிக்கோடு, மலப்புரம் பகுதிகளில் நிபா வைரஸ் பரவுவது கண்டறியப்பட்டது. அப்போது 17 பேர் வைரஸால் உயிரிழந்தனர். பின்னர் கடந்த 2019-ம் ஆண்டு கொச்சியிலும் கடந்த 2021-ம் ஆண்டில் கோழிக்கோட்டிலும் நிபா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 2024 செம்படம்பரிலும் நிபா வைரஸ் பரவல் இருந்தது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT