Published : 22 Jul 2024 06:48 PM
Last Updated : 22 Jul 2024 06:48 PM
மைசூரு: உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாராணசியில் பாய்ந்தோடும் கங்கை ஆற்றில் கங்கை ஆரத்தி வழிபாடு மிகவும் பிரபலம். அதுபோல கர்நாடகாவில் காவிரி ஆற்றில் காவிரி ஆரத்தி வழிபாடு நடத்த அம்மாநிலத்தில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.
கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் இன்று (திங்கட்கிழமை) மாண்டியாவில் உள்ள கேஆர்எஸ் அணையை பார்வையிட்டார். கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால், கிருஷ்ணராஜசாகர் (கேஆர்எஸ்), ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நீர்ப்பாசனத் துறையை தன்வசம் வைத்துள்ள துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், கர்நாடகாவில் காவிரி ஆற்றங்கரையில் ‘காவிரி ஆரத்தி’ நடத்துவது குறித்து திட்டமிட்டுள்ளார். இதற்காக விவசாயத் துறை அமைச்சர் என். செலுவராயசாமி தலைமையில் காவிரி பாசன பகுதிகளை சேர்ந்த மாண்டியா, மைசூரு மற்றும் குடகு மாவட்டங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு வாராணசிக்கு சென்று கங்கை ஆரத்தியை பார்வையிட உள்ளனர். அது தொடர்பாக அறிக்கை ஒன்றை மாநில அரசுக்கு தாக்கல் செய்வார்கள். இதில் அறநிலையத் துறை மற்றும் நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளும் உள்ளனர். இந்த பணிகள் அடுத்த 30 நாட்களுக்குள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து வாராணசியில் கங்கை ஆரத்தி மேற்கொள்வதில் அனுபவம் கொண்ட குழு கர்நாடகாவுக்கு வந்து, அதிகாரிகளுடன் இணைந்து காவிரி ஆரத்தி நடத்துவதற்கான சரியான இடத்தை தேர்வு செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுலா சார்ந்த மேம்பாடு மட்டுமல்லாது மக்களுக்கு காவிரி மீது மேலும் ஈர்ப்பை ஏற்படுத்தும் என ஆளும் தரப்பு நம்புவதாக தெரிகிறது.
கர்நாடகா, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஜீவாதார நதியாக காவிரி விளங்கி வருகிறது. தற்போது கர்நாடகாவில் மழை பதிவாகி அங்குள்ள அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ள காரணத்தால் அங்கு திறக்கப்படும் உபரி நீர் தமிழகத்துக்கு வந்து கொண்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT