Published : 22 Jul 2024 01:29 PM
Last Updated : 22 Jul 2024 01:29 PM

நீட் முறைகேடு விவகாரம்: முதல் நாளிலேயே மக்களவையில் காரசார விவாதம்

புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியதும் நீட் முறைகேடு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் மத்திய அரசு இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டத் தொடர் தொடங்கியதும் மக்களவையில் நீட் முறைகேடு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் மத்திய அரசு இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

நீட் முறைகேடு விவகாரம் தொடர்பாக விவாதம் செய்ய வேண்டும் என கேள்வி நேரம் தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் முறையிட்டன. தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், "நீட் முறைகேடுகளுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்க வேண்டும்" என்று பேசினார். தொடர்ந்து திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி, "நீட் தேர்வால் அனிதா தொடங்கி பல மாணவர்கள் உயிரிழந்துள்ளதால் இத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்" என்றார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், "ஓரிரு இடங்களில் மட்டும்தான் நீட் முறைகேடு நடந்துள்ளது. பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் ஒட்டு மொத்த பாஜக அரசும் அதற்கு பொறுப்பேற்கும்." என்றார்.

இதன்பின் எழுந்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், "வினாத்தாள் கசிவுகளில் இந்த அரசு புதிய சாதனைகளை படைத்துள்ளது. நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். விசாரணையில் பல தகவல்கள் அம்பலமாகின்றன. கைதுகள் நடக்கின்றன. தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சராக இருக்கும் வரை நீட் விவகாரத்தில் மாணவர்களுக்கு நீதி கிடைக்காது" என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் தர்மேந்திர பிரதான், "உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் நான் அரசியல் செய்ய விரும்பவில்லை, ஆனால் அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேச முதல்வராக இருந்தபோது எத்தனை வினாத்தாள் கசிவுகள் நடந்தன என்ற பட்டியல் என்னிடம் உள்ளது" என்றார்.

இப்படியான சூடான விவாதங்களுக்கு மத்தியில் எழுந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "இந்தியாவின் தேர்வு முறைகளில் பெரிய பிரச்சினை உள்ளது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. அமைச்சர் தன்னைத் தவிர மற்ற அனைவரையும் குற்றம் சாட்டியுள்ளார். இங்கு என்ன நடக்கிறது என்பதன் அடிப்படைகள் அவருக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன். பணம் இருந்தால், தேர்வுகளை விலைக்கு வாங்க முடியும் என்ற சூழல் நிலவுகிறது. இந்த உணர்வு எதிர்க்கட்சியில் உள்ளவர்களுக்கும் இருக்கிறது. இந்த சிக்கலை சரிசெய்ய அரசாங்கம் என்ன செய்கிறது?" என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு "நீங்கள் கத்தினால் பொய்கள் உண்மையாகிவிடாது. நாட்டின் பரீட்சை முறை குப்பை என்று அழைக்கும், ராகுல் காந்தியின் பேச்சை நான் கண்டிக்கிறேன். 2010ல் காங்கிரஸ் அரசின் கல்விச் சீர்திருத்தங்களுக்கான மூன்று மசோதாக்களை அமைச்சர் கபில் சிபல் கொண்டு வந்தார். யாருடைய அழுத்தத்தால் அந்த மசோதா வாபஸ் பெறப்பட்டது. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அழுத்தத்தால் வாபஸ் பெறப்பட்டதா?" என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலடி கொடுத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x