Published : 22 Jul 2024 11:26 AM
Last Updated : 22 Jul 2024 11:26 AM
புதுடெல்லி: "நாடாளுமன்ற கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த அனைவரின் ஒத்துழைப்பு தேவை. ஆக்கப்பூர்வமான கூட்டத் தொடர் நடைபெற வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்." என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடி, "இது ஒரு நேர்மறையான அமர்வாக இருக்க வேண்டும். இது முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தொடர் என்பதால், இது இந்திய ஜனநாயகத்தின் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நாட்டுக்காக உழைக்க வேண்டியது ஒவ்வொரு எம்.பி. மற்றும் ஒவ்வொரு அரசியல் கட்சியினரின் கடமை. நாளை தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான நாம் செய்யப்போகும் பணிக்கான திசையை வழங்கும்.
மேலும், இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் 2047-ம் ஆண்டுக்குள் "விக்சித் பாரத்" என்ற வளர்ந்த இந்தியா என்கிற நமது கனவுக்கு அடித்தளம் அமைக்கும். நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியான இடையூறுகள் செய்யப்படுவதால் காரணமாக ஒரு சில உறுப்பினர்களால் தங்களது கருத்துக்களை தெரிவிக்க முடியவில்லை என்பதை நினைத்து நான் வருத்தப்படுகிறேன்.
தேர்தலின் போது நடந்த அனைத்து அரசியல் சண்டைகளும் இப்போது கடந்த காலம். தேர்தலில் மக்கள் தீர்ப்பு வழங்கிவிட்டனர். எனவே, அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் அரசியலை விட நாட்டுக்காக உழைக்க வேண்டும் என அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
2029-ல் தேர்தல் வரும்போது நாம் மீண்டும் களத்தில் சந்திக்கலாம். தற்போது மக்கள் நலனே முக்கியம். அதுவரை, நமது நாட்டின் பெண்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கையை மேம்படுத்த இந்த நாடாளுமன்றத்தை பயன்படுத்துவோம்.
நாடாளுமன்ற கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த அனைவரின் ஒத்துழைப்பு தேவை. ஆக்கப்பூர்வமான கூட்டத் தொடர் நடைபெற வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். எனவே, மக்களின் நலன் கருதி, அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் செயல்பட வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...