Published : 22 Jul 2024 04:55 AM
Last Updated : 22 Jul 2024 04:55 AM

அனைத்து கட்சி கூட்டத்தில் கன்வர் யாத்திரை விவகாரத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சியினர்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு, டெல்லியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. கன்வர் யாத்திரை நடைபெறும் பகுதிகளில் உள்ள கடைகளில் உரிமையாளரின் பெயரை எழுதி வைக்க உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டதற்கு இக்கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, நேற்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திரிணமூல் காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, கூட்டத் தொடர் சுமுகமாக நடைபெற எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வேண்டுகோள்விடுத்தார். நாடாளுமன்றத்தில் முக்கிய பிரச்சினைகள் குறித்து பேச எதிர்க்கட்சி உறுப்பினர்களை அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் கவுரவ் கோகாய் வலியுறுத்தினார்.

மக்களவை துணை தலைவராக எதிர்க்கட்சியை சேர்ந்தவரை நியமிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், சுரேஷ் ஆகியோர் வலியுறுத்தினர். நீட்தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

ஆந்திரா, பிஹார், ஒடிசாவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், பிஜு ஜனதாதளம் கோரிக்கை விடுத்தன. இதற்கிடையே, கன்வர் யாத்திரை விவகாரத்தையும் எதிர்க்கட்சியினர் இக்கூட்டத்தில் எழுப்பினர்.

வடமாநிலங்களில் ‘கன்வர் யாத்திரை’ எனப்படும் காவடி யாத்திரை இன்று தொடங்கி ஆகஸ்ட் 2-ம்தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு இந்த யாத்திரையின்போது, உத்தர பிரதேசத்தின் முசாபர் நகர் பகுதியில் வியாபாரிகள் - பக்தர்கள் இடையே ஏற்பட்ட தகராறு, மத கலவரமாக மாறியது. இந்த நிலையில், சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளை தவிர்க்கும் விதமாக, யாத்திரை நடைபெறும் பகுதிகளில் உள்ள கடைகள், ஓட்டல்களில் உரிமையாளர்களின் பெயரை எழுதி வைக்குமாறு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, அந்த வழியில் உள்ள கடைகளில் உரிமையாளர்களின் பெயர்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளன.

இந்த உத்தரவு, முஸ்லிம் வியாபாரிகளுக்கு எதிரானது என்று அனைத்து கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த உத்தரவை உத்தர பிரதேச மாநில அரசு உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தின.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x