Published : 22 Jul 2024 05:48 AM
Last Updated : 22 Jul 2024 05:48 AM
புதுடெல்லி: கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பால் சிறுவன் உயிரிழந்த நிலையில்,வைரஸ் பரவலைத் தடுப்பது தொடர்பாக அம்மாநில அரசுக்கு மத்திய அரசு ஆலோசனை வழங்கி உள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் நிபா வைரஸ் அறிகுறி காரணமாக உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் கோழிக்கோடு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருடைய ரத்த மாதிரி புனே நகரில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனிடையே அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், நிபா வைரஸ் பரவலை தடுக்க உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கேரள அரசுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் 4 ஆலோசனைகளை வழங்கி உள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நிபா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவரின் குடும்ப உறுப்பினர்கள், அருகில் வசிப்பவர்கள் யாருக்காவது பாதிப்பு இருக்கிறதாஎன கண்டறிய வேண்டும். பாதிக்கப்பட்ட நபர் கடந்த 12 நாட்களில் யார் யாருடன் தொடர்பில் இருந்தார் என்பதை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும்.
நிபா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறி உள்ளவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப வேண்டும். நிபா வைரஸ் பரவலைத் தடுக்கும் கேரள அரசின் முயற்சிக்கு உதவும் வகையில், மத்திய சுகாதார அமைச்சகத்தின் நேஷனல் ஒன் ஹெல்த் மிஷன் அமைப்பைச் சேர்ந்த ஒரு குழு அனுப்பி வைக்கப்படும்.
கேரள அரசின் கோரிக்கையை ஏற்று, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைஅளிப்பதற்காக மோனோக்ளோனல் ஆன்டிபாடிஸை அனுப்பிவைத்துள்ளது.
நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட வர்களுடன் தொடர்பில் இருந்தவர் களின் ரத்த மாதிரிகளை பரிசோதிப்பதற்காக நடமாடும் பயோசேப்டி லெவல்-3 ஆய்வகம் கோழிக்கோடு நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT