Last Updated : 22 Jul, 2024 05:58 AM

2  

Published : 22 Jul 2024 05:58 AM
Last Updated : 22 Jul 2024 05:58 AM

காவடி யாத்திரை செல்லும் வழிகளில் ம.பி.யிலும் கடைகளில் வியாபாரி பெயர் வைக்க உத்தரவு

கோப்புப்படம்

புதுடெல்லி: காவடி யாத்திரைக்காக உத்தர பிரதேச அரசு பிறப்பித்த உத்தரவை அடுத்து, மத்தியப் பிரதேசத்தின் புனித நகரமான உஜ்ஜைனிலும், வியாபாரியின் பெயர் பலகை வைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

வட மாநிலங்களில் இன்று துவங்க உள்ள ஸ்ரவண மாதத்தில் சிவத்தலங்களுக்கு காவடி யாத்திரை நடைபெறுகிறது. புனித யாத்திரையாகக் கருதப்படும் இதன் பாதைகளில் அனைத்து வியாபாரிகளும் தங்கள் பெயர்களை பெரிதாக எழுதிவைக்க உபி அரசு உத்தரவிட்டிருந்தது. இதேபோன்ற அறிவிப்பு உத்தராகண்டிலும் வெளியிடப்பட்டதை அடுத்து பாஜக ஆளும் மூன்றாவது மாநிலமான ம.பி.யிலும் இதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மபியின் உஜ்ஜைன் நகரில் பழம்பெருமை வாய்ந்த காலபைரவன் கோயில் அமைந்துள்ளது. இங்கு காவடி யாத்திரை நடைபெறும்.

இதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு குறித்து உஜ்ஜைன் நகர பாஜக மேயரான முகேஷ்டட்வால் கூறும்போது, ‘‘வியாபாரிகள் தங்கள் பெயர்களுடன் கைப்பேசி எண்களை குறிப்பிட எவரும் மறுக்க முடியாது. ஏனெனில், வியாபாரிகளின் விவரங்களை அறியும் உரிமை பொதுமக்களுக்கு உள்ளது.

இதன் மூலம், முஸ்லிம் வியாபாரிகளை அறிந்து அவர்களுக்கு பாதுகாப்பை அளிக்க முடியும். இந்த உத்தரவை செப்டம்பர் 2022-ல் பிறப்பிக்க நகராட்சி முயன்று அதற்கு மாநில அரசின் அனுமதி கிடைக்கவில்லை. தற்போது நாட்டின் பல பகுதிகளில் அமலாக்கப்பட்டுள்ள உத்தரவை அவந்திகாவின் பெரிய தீர்த்த நகரமான உஜ்ஜைனிலும் அமல்படுத்தப்படுவது அவசிய மாகிறது’’ என்றார்.

அபராதம்: இதன் மீதான அபராதம் குறித்து உஜ்ஜைன் மாவட்ட ஆட்சியரான நீரஜ் குமார் கூறும்போது, ‘‘பெயர் பலகைகள் வைக்காதவர்களுக்கு முதன்முறை ரூ.2,000, மீண்டும் தவறினால், ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். இதன் பிறகும் உத்தரவை பின்பற்றாதவர்களின் கடைகளுக்கு சீல் வைக்கப்படும்’’ என்றார்.

மத்திய திறன் வளர்ச்சி மற்றும்சுயதொழில் துறையின் அமைச்சரான ஜெயந்த் சவுத்ரி கூறும்போது, ‘‘வியாபாரிகளின் ஜாதி, மதங்களை அறிந்து காவடியர் அவர்களை அணுகுவதில்லை. இப்பிரச்சினையை மதத்துடன் இணைப்பது தவறு. சரியான புரிதலுடன் பாஜக அரசு இந்த முடிவை எடுக்கவில்லை என்பதால் அதை திரும்பப் பெற வேண்டும். இனி நாம் அணியும் குர்தா பைஜாமாவிலும் பெயரை குறிப்பிட்டு தொங்க விட வேண்டுமா? இதை பார்த்த பின்தான் நீங்கள் கைகுலுக்க முன்வருவீர்களா?’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x