Published : 31 May 2018 02:39 PM
Last Updated : 31 May 2018 02:39 PM
ராஜஸ்தான் மாநிலத்தில், குடிநீரை இரவு நேரத்தில் கொள்ளையடித்துச் செல்லாமல் இருப்பதைத் தடுக்கும்வகையில், தண்ணீர் சேமித்து வைத்திருக்கும் பிளாஸ்டிக் டிரம்களுக்கு பூட்டுப் போட்டு மக்கள் பாதுகாத்துவருகின்றனர்.
வடமாநிலங்களில் அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக,பலநூறு அடிக் கிணற்றுக்குள் இறங்கி மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு செல்கின்றனர்.
மக்கள் மிகவும் துயரப்பட்டு குடிக்கக் கொண்டு செல்லும் தண்ணீரை இரவு நேரங்களில் சிலர்திருடிச்செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதைத் தவிர்க்கும் பொருட்டு குடிநீரை பாதுகாக்க மக்கள்பூட்டு போட்டுப் பாதுகாக்கின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம், பில்வாரா மாவட்டம், பரஸ்ராம்புரா கிராமத்தில் வாழும் மக்களுக்கு வாரத்தில்ஒருநாள் மட்டும் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தில் இருந்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. ராஜஸ்தான்மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 45 டிகிரிக்கும் மேலாக வெயில் கொளுத்தி வருவதால், கடும்வறட்சி ஏற்பட்டு தண்ணீர் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக மாறி இருக்கிறது.
இதனால், பரஸ்ராம்புரா கிராம மக்கள் தங்கத்தை பாதுகாப்பதுபோல் தண்ணீரை பாதுகாத்துவருகின்றனர். தங்கள் வீட்டின் முற்றத்தில் பெரிய டிரம்களில் சேமித்து வைத்திருக்கும் தண்ணீரை இரவுநேரத்தில் சிலர் திருடிச் சென்று விடுகின்றனர். இதைத் தடுக்கும் வகையில் அனைவரின் வீடுகளிலும்தண்ணீர் பிடித்து வைத்திருக்கும் பிளாஸ்டிக் டிரம்களில் பூட்டுப் போட்டு வைத்துள்ளனர்.
இது குறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், எங்கள் கிராமம், அதைச் சுற்றியுள்ள பலகிராமங்களில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. இரவு நேரங்களில் தங்கத்தைக்கொள்ளையடிப்பதுபோல், தண்ணீரையும் சிலர் திருடிச்சென்று விடுகிறார்கள். இதனால், குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கும் தண்ணீருக்கு மிகுந்த சிரமப்படுகிறோம். ஆதலால், தண்ணீர் சேமித்துவைத்திருக்கும் பிளாஸ்டிக் டிரம்களில் பூட்டுப்போட்டு இரவு நேரங்களில் பாதுகாத்து வருகிறோம்.
தண்ணீரைக்கூடக் கொள்ளையடிப்பார்கள் என்று நாங்கள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை, அதற்காகஒரு கும்பல் அலைவதை இப்போதுதான் நாங்கள் பார்க்கிறோம். ராஜஸ்தானில் உள்ள சூழலைப் பார்க்கும்போது, தங்கம், வெள்ளியைக் காட்டிலும், தண்ணீர்தான் விலைமதிப்புள்ள பொருளாக மாறிவிட்டது என்றுதெரிவித்தார்.
இதுவரை இந்தக் கிராமம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் தண்ணீர் திருட்டு தொடர்பாக போலீஸில் 3 புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் கூறுகையில், தண்ணீரைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்என்று பஞ்சாயத்து நிர்வாகம் என்னிடம் எச்சரித்துள்ளது. ஆதலால், வீட்டில் தண்ணீர் சேமித்த பிளாஸ்டிக்டிரம்முக்கு பூட்டுபோட்டுவிட்டேன். தண்ணீருக்காக மக்கள் ஒருவொருக்கு ஒருவர் கடுமையாகசண்டையிடுகிறார்கள். 3நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்கினால் மக்கள் இதுபோல் தண்ணீருக்காக சண்டையிடமாட்டார்கள், தண்ணீரையும் யாரும் திருடமாட்டார்கள் எனத் தெரிவித்தார்.
ராஜஸ்தான் மட்டுமல்லாது இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் தண்ணீர் பற்றாக்குறை கடுமையாக இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT