Published : 21 Jul 2024 06:11 PM
Last Updated : 21 Jul 2024 06:11 PM

“துன்பத்தில் இருப்பவர்களுக்கு அடைக்கலம் அளிக்க தயார்” - வங்கதேச மக்களுக்கு மம்தா பானர்ஜி ஆதரவுக்கரம்

கொல்கத்தா: “துன்பத்தில் இருக்கும் எவரும் எங்கள் கதவை தட்டினால், அவர்களுக்கு அடைக்கலம் அளிக்க தயார்” என்று வங்கதேச வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு தொடர்பான வங்கதேச வன்முறைப் போராட்டத்தில் 151 பேர் உயிரிழந்த நிலையில் மம்தா பானர்ஜி இவ்வாறு பேசியுள்ளார். இதுதொடர்பாக மம்தா மேலும் பேசுகையில், “வங்கதேச விவகாரங்கள் குறித்து பேசும் அதிகாரம் எனக்கு இல்லை. இந்தியாவின் அதிகாரபூர்வ நிலைப்பாடு கூட மத்திய அரசால் எடுக்கப்படும். எனினும் துயரத்தில் உள்ளவர்களுக்கு உதவுவேன்.

ஆதரவற்ற மக்கள் மேற்குவங்க கதவை தட்டினால் நாங்கள் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்போம். ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தின் அடிப்படையில் இதனை என்னால் கூற முடியும். வன்முறையால் வங்கதேசத்தில் ரத்தம் சிந்தப்படுவது வருத்தம் தருகிறது. உயிரிழந்த மாணவர்களுக்காக என் இதயம் துடிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு தொடர்பாக சமீபத்தில் வங்கதேச உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஓர் உத்தரவு மாணவர்களைக் கிளர்ந்தெழச் செய்து வீதிகளில் இறங்கிப் போராடத் தூண்டியுள்ளது. கடந்த 1971-ம் ஆண்டு வங்கதேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இடையில் ரத்துச் செய்யப்பட்டிருந்த இந்த இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும் என்று வங்கதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 1-ம் தேதி முதல் அங்கு போராட்டம் தொடங்கியது.

இதனால், வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாக கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது. அங்கு மாணவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையில் தொடர்ந்து மோதல் நடந்து வருவதால் நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருதரப்புக்கும் இடையிலான மோதல் நீடித்து வரும் நிலையில், இந்த வன்முறைச் சம்பவங்களுக்கு இதுவரை 130 பேர் உயிரிழந்தனர்; ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். அரசின் அதிகாரபூர்வ தொலைக்காட்சி வளாகம் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் செய்தித் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு தடைபட்டன.

கலவரத்தைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மொபைல் இணைய சேவைகள் தடை செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மறு உத்தரவு வரும் வரையில் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம், காவல் துறையின் இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. அதன் முகப்பு பக்கங்களில் ‘இனி இது போராட்டம் இல்லை, இப்போது இது போர்’ என்ற வாசகங்கள் ஒளிர்கின்றன. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர வங்கதேசத்தின் ஆளுங்கட்சி நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அமைதியை நிலைநாட்ட ராணுவத்துக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x