Published : 21 Jul 2024 03:05 PM
Last Updated : 21 Jul 2024 03:05 PM

நீட் முதல் கன்வார் சர்ச்சை வரை: அனைத்துக் கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

புகைப்படம்: ஆர்வி மூர்த்தி

புதுடெல்லி: நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நீட் விவகாரம் மற்றும் கன்வார் யாத்திரை சர்ச்சை போன்ற பல்வேறு விவகாரங்கள் எழுப்பப்பட்டன.

ஜூலை 22-ம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ளது. கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 வரை நடைபெற உள்ளது. ஜூலை 23-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த கூட்டத் தொடரில் ஆறு புதிய மசோதாக்களை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்னதாக மத்திய அரசு அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நடத்துவது வழக்கம். அதன்படி, இன்று (ஜூலை 21) அனைத்துக் கட்சி கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதானக் குழு அறையில் நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் நடந்தது என்ன?: ஆலோசனையின்போது, எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவி வழங்குவது குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியது. காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகோய், நீட் விவகாரம், அமலாக்கத்துறை போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் தவறாக பயன்படுத்துவதாகவும் புகார் கூறினார்.

அதேபோல், சமாஜ்வாடி கட்சி எம்பி ராம் கோபால் யாதவ், கன்வார் யாத்திரை வழித்தடங்களில் உள்ள கடைகள், ஓட்டல்கள் மற்றும் தள்ளுவண்டிகளில் உரிமையாளர் மற்றும் பணியாளர்களின் பெயர்களை எழுதி வைக்க வேண்டும் என்ற உ.பி அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தை பாஜகவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் எழுப்பியது. அதேநேரம், தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் கோரிக்கையை எழுப்பவில்லை. ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி இதே கோரிக்கையை எழுப்பிய நிலையில் தெலுங்கு தேசம் அமைதி காத்தது.

இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ், “ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், ஜே.டி. (யு) தலைவர் பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து கோரினார். ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரினார். விநோதமாக, இந்த விஷயத்தில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் அமைதியாக இருந்தார்.” என்று பதிவிட்டார்.

தொடர்நது, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, இரு அவைகளும் சுமுகமாக நடைபெற அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பைக் கோரினார். அதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகோய், எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பிரச்சினைகளை எழுப்ப அனுமதிக்க வேண்டும் என்று பதில் கோரிக்கை விடுத்தார்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நீட் விவகாரம் மற்றும் கன்வார் யாத்திரை சர்ச்சை போன்ற கொந்தளிப்பான பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் தங்களது நோக்கங்களை தெளிவுபடுத்தியுள்ள நிலையில், மத்திய அரசு மேலும் ஒரு பரபரப்பான நாடாளுமன்ற கூட்டத்தொடரை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக தலைவர் ஜே பி நட்டா, காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகோய் மற்றும் மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான், அசாதுதீன் ஒவைசி, பிரபுல் படேல் போன்ற பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x