Published : 21 Jul 2024 06:24 AM
Last Updated : 21 Jul 2024 06:24 AM
புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று நடுத்தர வர்க்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கடந்த பிப்ரவரி 1-ம் தேதி மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் பதவியேற்றுள்ள நிலையில் நாளை மறுநாள் முழுமையான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் சமானிய, நடுத்தர வர்க்க மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன. குறிப்பாக பழைய, புதிய வருமான வரி விதிப்புகளில், வருமான வரி விலக்கு உச்ச வரம்பை உயர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது.
பழைய விகிதத்தில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2.5 லட்சமாகவும் புதிய விகிதத்தில் ரூ.3 லட்சமாகவும் உள்ளது. இதனை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும். பழைய, புதிய விகிதத்தில், நிலையான விலக்கு வரம்பு தற்போது ரூ.50,000 ஆக உள்ளது. இதனை ரூ.1 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என்று சமானிய, நடுத்தர வர்க்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து நிதித் துறை நிபுணர்கள் கூறியதாவது: பழைய, புதிய விகிதத்தில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை புதிய விகிதத்தில் மட்டும் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு அதிகரிக்கப்படலாம்.
தற்போதைய நிலையில் புதிய விகிதத்தில் 6 வரி அடுக்குகள் உள்ளன. அதாவது 2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை 5% வரி, ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரை 10% வரி, ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 15% வரி, ரூ.10 லட்சம் முதல் ரூ.12.5 லட்சம் வரை 20% வரி, ரூ.12.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 25% வரி, ரூ.15 லட்சத்துக்கு மேல் 30% வரி விதிக்கப்படுகிறது.
ஜூலை 23-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான புதிய வரி அடுக்கு சேர்க்கப்படலாம். இதற்கேற்ப வரி விதிப்பு சதவீதத்திலும் முக்கிய மாற்றங்கள் செய்யப்படலாம். வீட்டுக் கடனுக்கான அசல் மற்றும் வட்டித் தொகைக்கான வரி விலக்கு வரம்பு அதிகரிக்கப்படலாம்.
புதிய விகிதத்தில் நிலையானவிலக்கு வரம்பு ரூ.1 லட்சமாகவும் பழைய விகிதத்தில் ரூ.70,000 ஆகவும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு நிதித்துறை நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் 2-வது முறையாக பதவியேற்றுள்ளார். அவர் இதுவரை தொடர்ச்சியாக 6 மத்திய பட்ஜெட்களை தாக்கல் செய்திருக்கிறார். ஜூலை 23-ம் தேதி அவர் 7-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
இதற்கு முன்பு, முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் தொடர்ச்சியாக 6 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார். அந்த சாதனையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முறியடிக்க உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT