Published : 21 Jul 2024 04:36 AM
Last Updated : 21 Jul 2024 04:36 AM

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து நகரங்கள், மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

கோப்புப்படம்

சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நீட் நுழைவுத் தேர்வு எழுதிய 23 லட்சம் மாணவர்களின் முடிவுகளை நகரங்கள் மற்றும் மையங்கள் வாரியாக என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது.

நம்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்திவருகிறது.

அதன்படி நடப்பாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 571 நகரங்களில் 4,750 மையங்களில் கடந்த மே 5-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வெழுத மொத்தம் 24 லட்சத்து 6,079 பேர் மாணவ,மாணவிகள் விண்ணப்பித்தனர். அதில் 9 லட்சத்து 98,298 மாணவர்கள், 13 லட்சத்து 34,982 மாணவிகள், 17 திருநங்கைகள் என மொத்தம் 23 லட்சத்து 33,297 பேர்மட்டுமே தேர்வை எழுதினர். அவர்களுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியானது.

தேர்வெழுதியதில் 5 லட்சத்து 47,036 மாணவர்கள், 7 லட்சத்து 69,222 மாணவிகள், 10 திருநங்கைகள் என மொத்தம் 13 லட்சத்து 16,268(56.41%) மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் இருந்து மட்டும் 89,426 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அதனுடன், இந்த தேர்வில் இதுவரை இல்லாத அளவுக்கு 67 பேர் முழு மதிப்பெண் பெற்றிருந்தனர். அதில் தமிழகத்தை சேரந்த 8 பேர் உட்பட இடம் பெற்றிருந்தனர்.

இதுதவிர நேரக் குறைபாடு சிக்கல்களை முன்வைத்து 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்ணை என்டிஏ வழங்கியிருந்தது. இந்த கருணை மதிப்பெண் வழங்கிய விவகாரம் கடும்விமர்சனங்களுக்கு உள்ளானது. இதுதொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணையில் 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டு, அந்த தேர்வர்களுக்கு மறுத்தேர்வு நடத்தப்படும் என்று என்டிஏ தெரிவித்தது. அதன்படி நீட் மறுத்தேர்வு ஜூன் 23-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 813 பேர் மட்டுமே எழுதினர். அதன் முடிவுகள் ஜூன் 30-ம் தேதி வெளியிடப்பட்டன.

எனினும், வினாத்தாள் விற்பனை, ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி பெரும் சர்ச்சையானது.

இதை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டங்களை நடத்தினர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள்தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்தமனுக்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீட் தகுதித் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த கோரியும், நீதிமன்ற கண்காணிப்பில் முழுமையான நேரடி விசாரணை நடத்தவும்

கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், மறு தேர்வுக்கு உத்தரவிட முடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

அதேநேரம் நீட் தேர்வின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் விதமாக முடிவுகளை மாணவர்களின் அடையாளங்களை மறைத்து நகரங்கள் மற்றும் மையங்கள் வாரியாக வெளியிட வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒரு நகரத்தில் அல்லது தேர்வு மையத்தில் அதிகமானவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனரா என்பதை கண்டறியும் வகையில் வெளிப்படையாக தேர்வு முடிவுகளை வெளியிட இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருந்தது.

அதையேற்று நீட் தேர்வு முடிவுகளை நகரங்கள் மற்றும் தேர்வு மையங்கள் வாரியாக என்டிஏ நேற்று வெளியிட்டது. அந்த விவரங்களை https://exams.nta.ac.in/NEET/ என்ற இணையதளத்தில் சென்று அறியலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000/ 69227700 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கூடுதலாக 437 மாணவர்கள்: இதற்கிடையே தமிழகத்தில் இருந்து நீட் தேர்வெழுத 1 லட்சத்து 58,449 மாணவர்கள் வரை விண்ணப்பித்தனர். அதில் 1 லட்சத்து 52,920 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 89,426 பேர் தேர்ச்சி பெற்றதாக ஜூன் 4-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் என்டிஏ தெரிவித்திருந்தது. ஆனால், நேற்று வெளியான புள்ளி விவரங்களில் 1 லட்சத்து 53,357 பேர் தான் தேர்வெழுதினர் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, கூடுதலாக 437 மாணவர்களின் விவரங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது சந்தேகங்களை எழுப்புகிறது.

இதேபோல், வேறு சில மாநிலங்களின் புள்ளி விவரங்களிலும் குளறுபடிகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதனுடன், ஹரியாணா மாநிலத்தில் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்களில் பலர் அதிக மதிப்பெண் பெற்றுள்ளதாகவும், அதிக மதிப்பெண் பெற்ற அந்தமான் தீவை சேர்ந்த மாணவர் ராஜஸ்தான் மையத்தில் தேர்வு எழுதியுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தேசிய தேர்வு முகமையிடம் விளக்கம் கேட்டு நேரடி கண்காணிப்பில் முழுமையான விசாரணை நடத்த வேண்டுமென கல்வியாளர்கள் தரப்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வை 2 கட்டமாக நடத்த பரிசீலனை: பொறியியல் படிப்புகளுக்கான ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதேபோல மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வையும் இரு கட்டங்களாக நடத்த மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதன்படி நீட் முதல்நிலை தேர்வு நடத்தப்பட உள்ளது. இதில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியர் நீட் இறுதித் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர்.

இரு தேர்வுகளையும் தனித்தனி கல்வி வாரியங்கள் மூலம் நடத்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதாவது நீட் முதல்நிலைத் தேர்வை, தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தும். நீட் இறுதித் தேர்வை தேசிய தேர்வு வாரியம் (என்பிஇ) அல்லது சிபிஎஸ்இ அல்லது எய்ம்ஸ் நிர்வாகம் நடத்தும். முதல்நிலை தேர்வு ஓஎம்ஆர் எனப்படும் காகித முறையிலும் இறுதித் தேர்வு கணினி வாயிலாகவும் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x