Published : 29 May 2018 06:42 AM
Last Updated : 29 May 2018 06:42 AM
தி
ருடர்கள் கூட தங்களுக்குள் நேர்மையைக் கடைபிடிப்பார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் உளவாளிகளும் இதுபோல் இருப்பார்களா..
உளவாளிகள் தொடர்பான வரலாற்றைப் படிக்கும்போது, பனிப்போர் காலத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்திருப்பது தெரியவரும். எதிரி நாடுகளின் உளவு அமைப்பின் தலைவர்கள் சந்திப்பதும், பேசுவதும், பரஸ்பர நட்பை வளர்த்துக் கொள்வதும் நடந்திருக்கிறது.
வெவ்வேறு காலகட்டங்களில் ‘ரா’ அமைப் பின் தலைவராக இருந்த ஏ.எஸ்.துலாத்தும் ஐஎஸ்ஐ அமைப்பின் தலைவராக இருந்த ஆசாத் துரானியும் இணைந்து எழுதியுள்ள புத்தகம் தொடர்பாக சமீபத்தில் இந்தியப் பத்திரிகைகளும் பாகிஸ்தான் பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டிருந்தன.
இரு நாடுகளின் உளவு அமைப்புகளின் தலைவர்களாக இருப்பவர்கள் பல்வேறு கால கட்டங்களில் ரகசியமாக வெளிநாடுகளில் சந்தித்துப் பேசுவது வழக்கம்தான். அமெரிக்க, ரஷ்ய உளவு அதிகாரிகளுக்கு ஆஸ்திரியாவின் வியன்னா நகர்தான் வசதி. அதுபோல் இந்திய, பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு தாய்லாந்து. சமீபத்தில் வெளியான ‘தி ஸ்பை குரோனிகிள்ஸ்’ நூலில், ஆசாத் துரானியின் மகன், மும்பை விமான நிலையத்தில் ‘விசா’ முறைகேட்டில் போலீஸாரிடம் பிடிபட்டபோது, ‘ரா’ உதவி செய்து காப்பாற்றிய சம்பவம் விவரிக்கப்பட்டுள்ளது. துரானி எப்போதோ ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால் துலாத்துடனான அவருடைய நட்பு, அவருடைய மகனைக் காப்பாற்றியது. துலாத், ‘ரா’ தலைவராக இருந்த ராஜிந்தர் கன்னாவுடன் பேசி, பிரச்சினையை சுமுகமாக முடித்துக் கொடுத்தார்.
ராஜீவ் காந்தி ஆட்சியின்போது, ‘ரா’ இயக்குநராக இருந்த ஆனந்த் வர்மா, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ தலைவராக இருந்த ஹமீத் குல்லுடன் ரகசியமாகப் பேசி வந்தது குறித்து ‘தி இந்து’ பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் மூலம் சியாச்சின் பிரச்சினையும் காஷ்மீர் பதற்றமும் தீர்க்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ராஜீவ் காந்தியும் ஜியா உல் ஹக்கும் விரும்பியபடி, இரு நாட்டு உளவு அமைப்புகளின் தலைவர்களிடையே பேச்சுவார்த்தை நடந்துள்ளது. முதல் பேச்சுவார்த்தைக்கு தனது நண்பரான ஜோர்டான் மன்னர் ஹாசனின் உதவியைப் பயன்படுத்திக் கொண்டார் ராஜீவ். ஹாசனின் மனைவி பாகிஸ்தானை சேர்ந்தவர் என்பதால், பாகிஸ்தானிலும் அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது.
ஆனால் ஜியா கொல்லப்பட்டதும் இந்த ரகசியப் பேச்சுவார்த்தைகள் நின்று போனது. ஜியாவின் அமைதி முயற்சியைப் பிடிக்காத ராணுவ ஜெனரல்கள்தான் அவர் கொல்லப்பட்டதற்குக் காரணம் என வர்மா சந்தேகப்பட்டார். ஐஎஸ்ஐ அமைப்பில் இருந்து குல் விலக்கப்பட்டார். பிறகு, இந்தியாவுக்கான தூதராக இருந்து பின்னர் வெளியுறவுச் செயலாளராக உயர்ந்த நியாஸ் நாயக்கும் மர்மமான முறையில் இறந்தார்.
இவை எல்லாமே ஜியாவுக்கு எதிரான சதியின் தொடர்ச்சிதான். ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார். குல் கொல்லப்பட்டபோது அதைக் கண்டித்து கருத்து தெரிவித்தார் வர்மா.
நானும் இதுபோன்ற ரகசிய சந்திப்புகளின்போது உடன் இருந்திருக்கிறேன். அம்மான் நகரில் மன்னர் ஹாசன் ஏற்பாடு செய்திருந்த ரகசியக் கூட்டத்தில் விமானப் படைத் தலைவர் எஸ்.கே.கவுல், அவருடைய சகோதரரும் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதருமான பி.கே.கவுல், லெப்டினன்ட் ஜெனரல் சதீஷ் நம்பியார், பாகிஸ்தானின் முன்னாள் ராணுவப் படைத் துணைத் தலைவர் ஜெனரல் கே.எம். ஆரீப், தொழிலதிபர் பாபர் அலி ஆகியோர் பங்கேற்றனர். இதேபோன்ற மற்றொரு ரகசியக் கூட்டத்தில் நானும் பங்கேற்றேன். அதில் இந்திய, பாகிஸ்தான் ராணுவப் படைத் தலைவர்கள் சுந்தர்ஜியும் ஜஹாங்கீர் கராமத்தும் பங்கேற்றனர். அவர்களோடு, ஜஸ்வந்த் சிங் (பின்னாளில் இவர் வாஜ்பாய் அமைச்சரவையில் பங்கேற்றார்), கே. சுப்பிரமணியம், சி. ராஜா மோகனும் இருந்தனர்.
1987-88-ல் இந்தியா இரண்டு முறை, ஒரு முறை போரின் போதும் மற்றொரு முறை அமைதிக் காலத்தின்போதும் ஆபத்தில் இருந்து தப்பியது. ‘பிராஸ்டாக்ஸ்’ என்ற பெயரில் அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் ராஜஸ்தான் எல்லையில் படைகளை இந்தியா குவித்தபோதும், அமைதி நடவடிக்கையாக பாகிஸ்தானுடன் சியாச்சின் ஒப்பந்தம் செய்து கொள்ள முயன்றபோதும், கடைசி நேரத்தில் தப்பியது. இதற்கும் ரகசியப் பேச்சுவார்த்தைகள்தான் காரணம்.
ஜியா உல் ஹக் இந்தியாவுடனான மோதல் போக்கைக் கைவிட்டதால்தான், கூட இருந்தவர்களே அவரைத் தீர்த்துக் கட்டியதாக வர்மா நம்பினார். ஐஎஸ்ஐ தலைவராக இருந்த குல் மேற்பார்வையில் பாகிஸ்தானின் அதிபர் ஹக் கொல்லப்படுகிறார். ஓராண்டுக்குப் பிறகு பெனாசிர் புட்டோ அரசு வந்த பிறகுதான், மூல்தான் ராணுவப் பிரிவுக்குத் தலைவராக மாற்றப்பட்டார்.
மாலத்தீவின் குரும்பா ரிசார்ட்டில் நடந்த ரகசிய கூட்டத்தில்தான் ஆசாத் துரானியை முதல் முதலாகச் சந்தித்துப் பேசினேன். அது 1998-ம் ஆண்டின் குளிர்காலம். அடல் பிஹாரி வாஜ்பாய் - நவாஸ் ஷெரீப் ஆட்சிக் காலத்தில் இரு நாடுகளிலும் அமைதி திரும்பியிருந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பேசுவது பெரிதும் குறைந்துவிட்டதாக ஆச்சரியப்பட்டார் துரானி. ‘காஷ்மீரில் ஏறக்குறைய அமைதியும் இயல்பு நிலையும் திரும்பி விட்டதுதான் காரணமாக இருக்கும்’ என்றேன் நான். ‘ஆனால் அது எப்போது வேண்டுமானாலும் மாறுமே’ என்றார் அவர். அதன்பிறகுதான் கார்கில் ஊடுருவல் நடந்தது. 6 மாதங்களுக்குப் பிறகு இரண்டு ராணுவமும் அங்கு சண்டையிட்டுக் கொண்டு இருந்தன. ஒருமுறை ஐஎஸ்ஐ தலைவராக இருந்துவிட்டால் போதும், எல்லா ரகசியங்களும் முன்கூட்டியே தெரிந்துவிடும்.
சேகர் குப்தா
‘தி பிரின்ட்’ தலைவர், முதன்மை ஆசிரியர்
தமிழில்: எஸ்.ரவீந்திரன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT