Published : 19 Jul 2024 05:49 PM
Last Updated : 19 Jul 2024 05:49 PM
புதுடெல்லி: கீர்த்தி திட்டத்தின் கீழ் 100 நாட்களுக்குள் ஒரு லட்சம் இளம் தடகள விளையாட்டு வீரர்கள் அடையாளம் காணப்படுவார்கள் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
மத்திய இளைஞர் நலன், விளையாட்டு, தொழிலாளர் நலன், வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கீர்த்தி (விளையாட்டில் புதிய திறமைசாலிகளை அடையாளம் காணுதல்) திட்டத்தின் 2-ம் கட்டத்தை தொடங்கிவைத்தார். அப்போது பேசிய அவர், "100 நாட்களுக்குள் ஒரு லட்சம் இளம் தடகள விளையாட்டு வீரர்களை அடையாளம் காணும் நோக்கத்துடன் கீர்த்தி திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் நாடு தழுவிய திறமை வேட்டை, 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை ஒலிம்பிக் போட்டிகளில் முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக மாற்றுவதற்கு ஒரு படியாக இருக்கும். இந்தியா பன்முகத்தன்மை மற்றும் திறன்கள் நிறைந்தது. இந்தியாவில் மூளைத்திறன், மனிதவளம் அல்லது திறமைக்கு எப்போதும் பற்றாக்குறை இருந்ததில்லை.
நகரங்கள் மட்டுமல்லாது, வடகிழக்கு மாநிலங்கள் போன்ற தொலைதூரப் பகுதிகள், கடலோரப்பகுதிகள், இமயமலை, பழங்குடியினர் பகுதிகளும் தரமான விளையாட்டு வீர்ர்களை கொண்டதாக உள்ளன. இதுபோன்ற திறமையான விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு அவர்களது திறமையை மேம்படுத்துவதே கீர்த்தி திட்டத்தின் நோக்கம்.
நமது வாழ்க்கையில் விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். விளையாட்டுத் துறையில் இந்தியாவை வல்லரசாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திறமையான வீரர்களுக்கு உதவி செய்கிறது. இதன் காரணமாக ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் பெறும் இந்திய வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT