Published : 19 Jul 2024 11:26 AM
Last Updated : 19 Jul 2024 11:26 AM

“உரிமையாளர் பெயருடன் பலகை” - கன்வார் யாத்திரை வழித்தட உணவகங்களுக்கு உ.பி அரசு உத்தரவு

கன்வார் யாத்ரா

முசாபர்நகர்: உத்தரபிரதேசத்தில், கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் உள்ள அனைத்து உணவகங்களுக்கும் அவற்றின் உரிமையாளர்களின் பெயர்களை காண்பிக்கும் பெயர்ப் பலகைகளை வைக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உத்தராகண்ட், உத்தரபிரதேசம் போன்ற வட மாநிலங்களில் ஒவ்வோர் ஆண்டும் இந்துக்களின் ஷ்ரவண மாதத்தில் (ஜூலை – ஆகஸ்ட்) கன்வார் யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. இந்த யாத்திரை மேற்கொள்ளும் சிவ பக்தர்கள் கன்வாரியாக்கள் என அழைக்கப்படுகின்றனர். வட மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று கங்கை நீரை எடுத்து வருவார்கள். பிறகு அந்த கங்கை நீரைக் கொண்டு தங்கள் ஊர்களில் உள்ள சிவன் ஆலயங்களில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் நடத்துவார்கள்.

இதற்கிடையே, உத்தரபிரதேசத்தில், கன்வார் யாத்திரை செல்லும் வழித்தடத்தில் உள்ள அனைத்து உணவகங்களுக்கும் அவற்றின் உரிமையாளர்களின் பெயர்களை காண்பிக்கும் பெயர்ப் பலகைகளை வைக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, ஒவ்வொரு உணவகங்களும் அல்லது தள்ளு வண்டி உணவுக்கடைகள் உட்பட தங்கள் உரிமையாளரின் பெயரை உணவகத்தின் பெயர்ப் பலகையில் வைத்திருக்க வேண்டும்.

கன்வார் யாத்திரை மேற்கொள்பவர்களின் புனிதத்தை பாதுகாக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று யோகி ஆதித்யநாத் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். கன்வர் யாத்திரை ஜூலை 22-ம் தேதி தொடங்க உள்ளதால் உத்தரபிரதேசம் முழுவதும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

முன்னதாக, முசாபர்நகர் மாவட்ட காவல்துறை மாவட்டத்தில் கன்வார் யாத்திரை வழித்தடத்தில் உள்ள உணவகங்களுக்கு இதே உத்தரவை உணவகங்களுக்கு விதித்தது. இது மாநிலத்தில் எதிர்ப்புகளை ஏற்படுத்தியது. “மத நல்லிணக்கத்துக்கு இத்தகைய உத்தரவு கேடு விளைவிக்கும். மாநிலத்தின் இணக்கமான சூழலை கெடுக்கும்” என முன்னாள் முதல்வர்களான சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி மற்றும் அசாதுதீன் ஓவைஸி போன்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்த பின்னர் முசாபர்நகர் காவல்துறை அந்த உத்தரவை ரத்து செய்தது. காவல்துறையால் ரத்து செய்யப்பட்ட ஒருநாள் கழித்து தற்போது உத்தரபிரதேச மாநில அரசு அதே உத்தரவை திரும்பப் பிறப்பித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x